states

img

கருணை அடிப்படையில் வேலை பெற திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு... பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சண்டிகர்:
திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பஞ்சாபைச் சேர்ந்த தலைமைக் காவலர் கஷ்மீர் சிங் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து , கருணை அடிப்படையில் தங்களது ஒரே மகளான அமர்ஜித்துக்கு குமாஸ்தா அல்லது கணினி ஆபரேட்டர் பணி வழங்கக்கோரி கஷ்மீர் சிங்கின் மனைவி ஜஸ்பிர் கவுர் காவல்துறையிடம் மனு அளித்தார். ஆனால், அமர்ஜித் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அமர்ஜித் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கஷ்மீர் சிங்கின் ஒரே மகள் நான். எனக்கு திருமணம் ஆனாலும் எனது கணவர், குழந்தைகளுடன் தாய்வழி வீட்டில்தான் இருக்கிறேன்.எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. எனவே எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று  கோரியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அளித்ததீர்ப்பில், பணியில் இருப்பவர் உயிரிழந்தால்அவரை நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகத்தான் கருணை அடிப்படையில் வேலை வழங்க சட்டம் வகை செய்கிறது. மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்கூட அவருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், மகளுக்கு திருமணமானால் மட்டும் பணி மறுக்கப்படுவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள பாலின சமத்துவத்துக்கு எதிரானதாகும். திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு. எனவே, ஒரு மாதத்துக்குள் அமர்ஜித்துக்கு காவல் துறையில் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.