states

ஜெலன்ஸ்கிக்கு இடமில்லை தென் அமெரிக்க தலைவர்கள் உறுதி

மாட்ரிட், ஜூலை 4- ஐரோப்பிய யூனியன் மற்றும் லத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பங்கேற்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தென் அமெரிக்க நாடுகள் கூறிவிட்டன. ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இந்த உச்சிமாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அழைக்கப் போவதாக ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்சென் அறிவித்திருந்தார். ஆனால், தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களில் சிலர் அவர் வருகைக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.  தன் மீதான எதிர்ப்பு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, “உச்சி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று எனக்கு விடுத்த அழைப்புக்கு ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சில தென் அமெரிக்க நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் எனக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார். ரஷ்ய-உக்ரைன் விவகாரத்தில் ஒருதரப்பில் நிற்பது போன்ற தோற்றத்தை அவருடைய பங்கேற்பு ஏற்படுத்திவிடும் என்று கருதியதால்தான் எதிர்ப்பு கிளம்பியது. பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் இந்த உச்சிமாநாட்டின் மூலம் ஒரு பெரிய இலக்கை நோக்கிய பயணம் தொடங்கும்  என்று சான்செஸ் கூறியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “ரஷ்ய-உக்ரைன் மோதலில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகப் புதிய உறவுகளை உருவாக்க வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்த உச்சிமாநாடு அமையும்”என்று தெரிவித்தார்.

;