புதுதில்லி,அக்.13- கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங் களுக்கு பிஎச்டி கட்டாயம் என்பதில் 2023 ஆம் ஆண்டு வரை விலக்கு அளித்துள்ளது. கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறை 2018 இல் கொண்டு வரப்பட்டது. பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறையில் பல்கலைக்கழக மானியக்குழு 2023 வரை விலக்கு அளித்துள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. அடுத்த ஆறு மாத காலங்களுக்குள் மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியிருந்தது. யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகியவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏழு ஆராய்ச்சித் தாள்களை வெளியிட்டிருக்க வேண்டும்.பேராசிரியர் பதவி உயர்வு பெற, 10 ஆண்டுகள் பணி அனுபவமும், குறைந்தபட்சம் 10 ஆராய்ச்சி பேப்பர்களை வெளியிட்டிருக்க வேண்டும். கல்லூரி முதல்வர் பணியில் நியமிக்கப்படுபவர் பிஎச்.டி. முடித்திருப்பதோடு, 15 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஆராய்ச்சி மதிப்பெண் 120 பெற்றிருக்க வேண்டும் என்றும் வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.