புதுதில்லி, டிச.7- நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதற்கு பிறகு, அரசுப் பணிகளில் புதிய பணி நியமனங்களே இல்லை என்ற அளவிற்கு மிகச்சொற்பமான பணி நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மொத்தமாகவே ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 6 லட்சத்து 98 ஆயிரம் பணி நியமனங்களே வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள், குறிப்பாக ரயில்வே, வங்கி, கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள் என அனைத்துத் துறைகளிலும் பல லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய முப்படைகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 555 பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், “இந்திய ராணுவத்தில் 7 ஆயிரத்து 476 அதிகாரிகள், 97 ஆயிரத்து 177 வீரர்கள், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள், 4 ஆயிரத்து 850 வீரர்கள், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் மற்றும் 11 ஆயிரத்து 166 வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆள்பற்றாக்குறையைக் குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்கள் பாதுகாப்பு படைகளில் சேருவதை அதிகரிக்க பள்ளி, கல்லூரிகள் மற்றும் என்சிசி முகாம்களில் ஊக்குவிப்பு உரைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றன” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.