states

img

குஜராத் தேர்தல் ஆணையம் கார்ப்பரேட்டுகளுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்திடுக - சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுதில்லி, அக்.20- குஜராத் தேர்தல் ஆணையம், கார்ப்பரேட்டு களுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கோரியிருப்பதாவது: குஜராத்தில் முதன்முதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், தேர்தல்  ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்து அவற்றின்மீது தங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். அந்தப் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களில் தேர்தல் ஆணைய மானது, கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் உள்ள தொழிலாளர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

அவமானப்படுத்துவது பலவந்தப்படுத்துவது

இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  தனிப்பட்ட பிரிவுகளுடனும் (individual  units), ஒட்டுமொத்த தொழிற்பிரிவுகளு டனும் (industry bodies) கையெழுத்திடப் பட்டிருக்கின்றன. இந்த ஆண்டின் இறுதியில் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதைப்போன்றதொரு அருவருப்பான, ஒழுக்கக்கேடான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது என்று நாங்கள் பலமாக உணர் கிறோம். வாக்காளர்கள் மத்தியில் உள்ள அக்கறை யின்மையை அகற்றுவதற்கான முயற்சி என்று  தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூறப் பட்டிருக்கிறது. ஆனால், வாக்களிக்காதவர்கள் பெயர்களை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என்று கூறி, அவர்களை அவமானப் படுத்தியிருப்பது, அவர்களைக் கட்டாயமாக வாக்களிக்க வைப்பதற்கான பலவந்தமான நடவடிக்கையேயாகும்.

குஜராத் அதிகாரியின் கூற்று

குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரி, “நாங்கள் இவ்வாறு 233 புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டிருக்கிறோம். இவை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்ற உதவிடும்,” என்றும், “குஜராத்தில் முதன்முறையாக 1,017 தொழிற்சாலைகளுக்குச் சொந்தமான தொழிலாளர்களின் தேர்தல் பங்கேற்பைக் கண்காணிக்க இருக்கிறோம்,” என்றும் கூறியிருப்பதாக மேற்கோள் காட்டி யிருக்கிறது ஒரு அறிக்கை. வாக்களிக்கும் உரிமை என்பது அரசமைப்பு சட்டத்தின் 326ஆவது பிரிவின்கீழ் உத்தரவாத மளிக்கப்பட்டுள்ள உரிமை என்று தங்களுக்கு  நாங்கள் நினைவுகூர்வது துரதிர்ஷ்டவசமான தாகும்.

அடிப்படை உரிமையாக  திணிக்கப்பட முடியாது

மேலும், கட்டாயமாக வாக்களிக்கும் உரிமை யை அமல்படுத்துவது குறித்து உச்சநீதி மன்றம், ஒன்றிய அரசாங்கத்திடம் கருத்து கேட்டி ருக்கிறது என்று உங்களுக்கு நினைவுபடுத்து கிறோம். இதற்கு 2015இல் பதிலளித்த ஒன்றிய  சட்டம் மற்றும் நீதி அமைச்சர், கட்டாயமாக வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டால், அது நாட்டில் ஜனநாயக விரோதச்  சூழலை உருவாக்கிடும் என்று பதிலளித்திருந் தார். மேலும் ஒன்றிய அரசாங்கமானது, வாக்களிப்பதற்கு உரிமை இருக்கிறது என்று கூறுவதில், வாக்களிக்காததற்கு உரிமை இருப்பதும் உள்ளடங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் ஒன்றிய அரசாங்கம், தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான சட்ட ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வாக்க ளிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாகத் திணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.

கார்ப்பரேட்டுகள் மூலம் தேர்தல் 

இப்போது தேர்தல் ஆணையமானது, கார்ப்பரேட்டுகள் மூலமாக வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக வலி யுறுத்தியிருப்பது முற்றிலும்  அரசமைப்புச்  சட்டத்திற்கு எதிரானதாகும். தேர்தல் பத்தி ரங்கள் மூலமாக கார்ப்பரேட்டுகளிடமிருந்து ஏற்கனவே நிதி பெற்றுவரும் சர்ச்சைக்குரிய பின்னணியில், இப்போது தேர்தலையும் அவர்கள் மூலம் நடத்த முன்வந்திருக்கிறது. மேலும், இப்போது மின்னணு வாக்கு எந்திரங்கள் (EVM) மூலமாக, வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியபின்னர், ஏற்கனவே வாக்குச்சீட்டுகளைக் கலக்கியபின்னர் பொறுக்கி எடுத்து வாக்கு எண்ணும் பணி நடை முறையில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இதனால் மின்னணு வாக்கு எந்திரங்களில் யார், யாருக்கு  வாக்களித்தார்கள் என்று எளிதாகத் தெரிந்து கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.

மிரட்டிப் பழிவாங்கல்..

இவ்வாறு எந்தத் தொழிலாளி யாருக்கு வாக்களித்தார் என்பதை சம்பந்தப்பட்ட அந்தத்தொழிலாளியின் கார்ப்பரேட் நிறுவனம் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்பதால், தொழிலாளர்கள் பின்னர் மிரட்டி பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படக்கூடும். இது, ரகசிய வாக்கெடுப்புமுறை என்பதையே கேலிக்குரியதாக மாற்றி இருக்கிறது.    எனவே, குஜராத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து, மேலே கூறிய சர்ச்சைகள் அனைத்தையும் சரி செய்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியு றுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று சீத்தாராம் யெச்சூரி அவரது கடிதத்தில் கோரியுள்ளார். (ந.நி.)


 

;