புதுதில்லி,டிச.19- யுபிஎஸ்சி (UPSC) தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களை அனைத்து மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நேரில் வலியுறுத்தினார். இதுகுறித்து அமைச்சரிடம் சு.வெங்க டேசன் எம்.பி. அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: மத்திய பொதுத் தேர்வு ஆணையம் (UPSC) 25 பதவிகளுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) ஆகியனவும் அடங்கும். இப்பதவிகள் ஆட்சி நிர்வாகத்திற்கு பெரிதும் பயன்படுபவை ஆகும். இப் பதவிகளில் அமர்பவர்கள் அரசின் கொள்கை உருவாக்கத்திலும், முடிவுகளை எடுப்பதிலும் இவர்கள் முக்கியப் பங்கை ஆற்றுபவர்கள்.
என்றாலும் இப் பதவிகளுக்கான தேர்வு முறைமையில், அமைப்பு ரீதியான பாரபட்சம் இருக்கிறது. காரணம் கேள்வித் தாள்கள், துவக்க நிலைத் தேர்வுகளிலும், இறுதித் தேர்வுகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. இது இயல்பாகவே இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் தேர்ச்சி விகிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வர்கள் ஆங்கிலக் கேள்விகளை தாய்மொழியில் உள் வாங்கி, புரிந்து பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் இந்தி கேள்வித் தாள்களே கிடைக்கப் பெறு கிறார்கள். இந்த வாய்ப்பு தமிழ் உள்ளிட்ட இந்தி யல்லாத மாநில மொழிகளை தாய் மொழி யாக கொண்ட தேர்வர்களுக்கு கிடைப்ப தில்லை.
இது இயற்கை நீதிக்கு புறம்பானது. இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களுக்கு சமதள களத்தை உறுதி செய்யாது. கேள்வித் தாள்கள் தமிழில் இல்லாததால் தேர்வுக்கான தயாரிப்பு நூல்களும் தமிழில் கிடைப்பதில்லை. அதுதானே சந்தையின் விதி. இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்கள் தேர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வரு கிறது என அறிகிறோம். இந்தி பேசுவோரின் மக்கள் தொகையை விட இங்கு தேர்வு தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலம் எனினும், மத்திய பொதுத் தேர்வு ஆணைய (UPSC) தேர்வு களின் தேர்ச்சி உரிய அளவில் இருப்ப தில்லை. மேலும் கேள்விகளின் உள்ளடக்கத்தி லும் சமனின்மை இருப்பதாக தேர்வர்களின் கருத்து உள்ளது.
நமது நாட்டின் பன்மைத்து வம் கேள்வித் தாள் அமைப்பில் பிரதிபலிக்க வேண்டுமென்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே ரயில்வே பணி நியமனம் உள்ளிட்ட சில அகில இந்திய தேர்வுகள் மாநில மொழிக் கேள்வித் தாளை உள்ளடக்கி நடை பெற்று வருகிறது. எனவே மத்திய பொதுத் தேர்வு ஆணையம் (UPSC) கேள்வித் தாள்களை மாநில மொழிகளில் தருவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. எனவே உங்களின் உடனடி தலையீடு தேவை என வேண்டுகிறேன். மத்திய பொதுத் தேர்வு ஆணையம் (UPSC) துவக்க நிலை, இறுதித் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழி கேள்வித் தாள்களை உறுதி செய்ய வும் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.