states

img

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது!

அகமதாபாத், ஜூலை 7 - குற்றவியல் அவதூறு வழக்கில், தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  மேலும், ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். 2019 மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019  ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம்  கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் உரையாற்றினார். அப்போது, “நீரவ்  மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்து திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். ராகுலின் இந்தப் பேச்சானது, பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக எம்எல்ஏ-வும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி புகார் அளித்தார். 

2021 முதல் 2023 வரை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில்,  கடந்த மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கிய  சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  நீதிபதி எச்.எச். வர்மா, இந்திய தண்டனை  சட்டப் பிரிவு 504-இன் கீழ், ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்ட னை விதித்தார். ராகுல் காந்தி உடனடி யாக பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணையும் வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மா, 30 நாட்களுக்குள் தீர்ப்பு க்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறை யீடு செய்யலாம் எனவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார். இதனிடையே, குற்ற வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8-ன் படி 102(1)(e) அடிப்படையில், மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது என்ற காரணத்தைக் காட்டி, தீர்ப்பு வெளி யான 24 மணி நேரத்திற்குள் ராகுலை எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து, மக்களவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, “தனக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மனு வும், வழக்கு முடியும் வரை தண்டனை யை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மற்றொரு மனுவுமாக, சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல் 3 அன்று, இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுக்களை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராபின் மொகேரா கடந்த ஏப்ரல் 13 அன்று தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கு கடந்த மே 2-ஆம் தேதி, நீதிபதி ஹேமந்த் பிரச்சக் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக் கால தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்; என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏனென்றால், ராகுல் காந்தி வென்ற வய நாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறி விக்கும் பட்சத்தில், அதனை ராகுல் காந்தி யால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் இடைக்கால உத்தரவு கோரப்பட்டது. ஆனால், குஜராத் உயர் நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்துவிட்டது. ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி ஹேமந்த் பிரச்சக், மே 6 துவங்கி ஜூன் 5 வரை நீதிமன்றத்திற்கு கோடை  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால்,  விடுமுறைக்கு பின்னரே வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில்தான், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில், வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 7)  முற்பகல் 11 மணிக்கு தீர்ப்பு வழங்கிய குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் குஜ ராத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னதாக, ராகுல் காந்தி ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “மனுதாரர் (ராகுல் காந்தி) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சமூக தார்மீகத்தை சீர்குலைக்கும் வகையில் இல்லை. இவை பெரும்பாலும் குற்ற மாக கொள்ள வேண்டியது அல்லாத (non-cognizable), பிணையில் வெளி வரக்கூடிய (Bailable) மற்றும் தீவிர மில்லாத தன்மை (Non-serious Offence)  உடையதாகவே உள்ளன. எனவே, சிறைத் தண்டனையை ரத்து செய்ய  வேண்டும். மேலும், ராகுல் காந்தி நாடாளு மன்ற உறுப்பினராக இருப்பதால், இந்த சிறைத் தண்டனை, அவருக்கு மீள முடியாத பாதிப்பை உருவாக்கும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொள்ள முடியாததன் மூலம், மக்க ளின் குரலை பிரதிநிதித்துவம் செய்ய முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களுக்கான குரல்களை இழந்துள்ளனர்” என்று வாதங்களை முன்வைத்திருந்தார். எதிர்த்தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், “நீதிமன்றம் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்யவில்லை. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் கீழ்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, அவர் மீள முடியாத துயரை அனுபவிக்கிறார் என்பது தவறு. மேலும், ‘சிறைத் தண்டனை தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு’ என்றும், ‘மன்னிப்பு கோர முடியாது’ என்றும் அவர்  பொதுவெளியில் பேசியுள்ளார். இது தான், அவரின் வெளிப்படையான நிலைப் பாடு. எனவே, சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடு வது அவரின் போலித் தன்மையை காட்டுகிறது” என்று கூறியிருந்தார். இந்த பின்னணியில் வழக்குகளை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், ராகுல் காந்தி உச்ச  நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது. அங்கு அவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட்டால் மட்டுமே, 2 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து மீள முடியும். மேலும், சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்யாத பட்சத்தில், அவர் 8 ஆண்டு களுக்குத் தேர்தலிலேயே போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வராத பட்சத்தில், அது காங்கிரஸ் கட்சி யினருக்கு பெரும் பின்னடைவாக அமை யும் என்பதுடன், பாஜகவும் அதைத் தான் விரும்புகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக-வின் சதித் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்

கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்ட னைக்குத் தடை கோரி, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை  தள்ளுபடி செய்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இத்தீர்ப்பு குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “ராகுல் எப்போதுமே சத்தியத்திற்காகப் போராடினார்; எதிர்காலத்தில் தொடர்ந்து போராடுவார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பாஜக அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” எனவும் கார்கே குறிப்பிட்டுள் ளார்.

சாவர்க்கர் பேரனின் வழக்கை குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சக்

அதில், “ராகுல் காந்தி எந்த ஒரு அடிப்படையுமே இல்லாமல் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கச் சொல்லி தடை கோருகிறார். ராகுல் காந்திக்கு கீழமை நீதிமன்றம் சரியாகவும், சட்டப்படியாகவும்தான் தண்டனை வழங்கியுள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் எந்த ஒரு காரணமும் இல்லை. ராகுல் காந்தி மீது மேலும் 10 குற்றவியல் அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வி.டி. சாவர்க்கர் பேரன் புனே நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கை தொடர்ந்து, அதுவும் நிலுவையில் உள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது சட்டமல்ல. அரிதினும் அரிதான சில வழக்குகள் மட்டுமே விதி விலக்கானவை. அரசியலில் தூய்மை என்பது தேவை. ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்காததாலேயே அவருக்கு அநீதி எதுவும் இழைக்கப்படவும் இல்லை!”  - என்று நீதிபதி ஹேமந்த் பிரச்சக் குறிப்பிட்டுள்ளார்.