states

காய்கறி, மசாலா, பால், தானியங்கள் விலை கடும் உயர்வு உணவு பணவீக்கம் 7.62% ஆக அதிகரிப்பு

புதுதில்லி, செப். 13 - நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.00 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71 சதவிகித மாக இருந்த சில்லரை விலைப் பண வீக்கம், 0.29 புள்ளிகள் அதிகரித்து ஆக ஸ்டில் 7.00 சதவிகிதமாகி உள்ளது. இதன்மூலம் சில்லரைப் பண வீக்க விகிதம் தொடர்ந்து, 8-ஆவது மாதமாக, ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிர்ணயித்த 6 சதவிகிதம் என்ற பணவீக்க உச்ச வரம்பைத் தாண்டி பதிவாகியுள்ளது. மார்ச் 2026-இல் முடிவடையும் ஐந்தாண்டு காலத்திற்கு, சில்லரைப் பணவீக்கத்தை 4 சதவிகிதமாகவும் அல்லது அதிலிருந்து 2 சதவிகிதம் கூடுதலாகவோ - குறைவாகவோ என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில், பணவீக்கத்தை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. கடந்த மாதம் நடைபெற்ற இந்திய  ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தி 5.40 சதவிகிதமாக அறிவித்தது. நடப்பு 2022-23  நிதி யாண்டின் 5 மாதங்களில் மட்டும்  இதுவரை முக்கிய வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி 140 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. எனினும், சில்லரை விலைப் பணவீக்கம் 2022 ஆகஸ்டில் 7 சதவிகிதத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பண வீக்கத்திற்கு, உணவுப் பொருட்கள் விலைவாசி அடிப்படையிலான பண வீக்கமே முக்கிய காரணம் என்று ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஆகஸ்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் மட்டும் 7.62 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஜூலை மாதத்தில், உணவுப் பொருட்களின் பணவீக்கம் 6.69 சதவிகிதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. அது தற்போது 31 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

;