வாடிகன், ஜன.16- சிறந்த உலகத்தை கனவு காண்பதை நிறுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது போப் பிரான்சிஸ் கூறினார். போர்களாலும், பிரிவினைகளாலும் பிளவுபட்டுள்ள உலகம் தன்னை காயப்படுத்துகிறது என தெரிவித்த அவர், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் சிறந்த நாளைக்காக உழைக்குமாறும் அழைப்பு விடுத்தார். நலிவுற்றோரை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும், சமூகம் மற்றும் அரசியலில் ஊடுருவியுள்ள ஊழல், அதிகார அத்துமீறல் மற்றும் அவற்றை தடுப்பதற்கான சட்டமின்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கூறினார். உரையாடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி, 15 பிரதிநிதிகளை போப் சந்தித்தார். சோசலிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உரையாடலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த உரையாடல். 2014 இல் போப் பிரான்சிஸ், கிரீஸின் முன்னாள் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், ஐரோப்பிய இடதுசாரிக் கட்சித் தலைவர் வால்டர் பேர் மற்றும் ஃபோகலார் இயக்கத்தின் ஃபிரான்ஸ் க்ரோன்ரீஃப் ஆகியோரின் சந்திப்பிற்குப் பிறகு இந்த உரையாடலுக்கான மன்றம் உருவாக்கப்பட்டது.