states

img

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் நடந்த மோசடிகள் குறித்து விவாதிக்க பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புக்கான நோட்டீஸ்

திரிபுரா மாநிலத்தில் நகராட்சிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிவிட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து விவாதித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன், மக்களவை இதர அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு,  திரிபுரா உள்ளாட்சி அமைப்புகளுக்கான மோசடி குறித்து, விவாதித்திட வேண்டும் என வலியுறுத்தி ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கான அறிவிப்பை அளித்திருக்கிறார்.

திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக மாநில அரசின் உதவியுடன் குண்டர் கும்பல்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று இடது முன்னணி வேட்பாளர்கள், அவர்களின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர். தேர்தல் நாளன்று எவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று கூறியதோடு, பலரை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டி அடித்திருக்கின்றனர். மிகப்பெரிய அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். இடது முன்னணிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் என்று கருதிய எவரையும் வாக்களிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். இடது முன்னணிக்கான தேர்தல் முகவர்களையும் கடுமையாகத் தாக்கி விரட்டியடித்திருக்கின்றனர்.

ஏழு நகராட்சிகளில் இடது முன்னணிக்காகப் போட்டியிட வந்த வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் விரட்டியடித்ததன் காரணமாக அந்நகராட்சிகளில் பாஜக சார்பான வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை அளித்துள்ளபோதிலும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இவ்வாறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக வந்திருந்த காவல்துறையினரும், துணை பாதுகாப்புப் படையினரும் நடைபெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் வெறும் பார்வையாளர்களாக இருந்துள்ளனர். இவ்வாறு ஜனநாயகநெறிமுறைகள் மீறப்பட்டிருப்பது குறித்து மக்களவையின் இதர பணிகளை ஒத்திவைத்துவிட்டு, விவாதம் நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, பி.ஆர்.நடராஜன் ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கான அறிவிப்பை அளித்திருக்கிறார்.