தெலுங்கானா எம்எல்சி கே.கவிதா பேச்சு
புதுதில்லி, செப்.8- பாஜக ஆட்சியில் விலை உயர்த்தப்பட்ட பொருட்களில், எங்களது கட்சியினர் பிரதமர் மோடியின் படங்களை இடம்பெறச் செய்வார்கள் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டி மாவட்டம் பீர்கூர் நகரில் உள்ள ஒரு ரேசன் கடைக்குச் சென்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேசன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கப்படாதது ஏன்? என்று கேட்டு அந்த மாவட்ட ஆட்சியரிடம் சண்டை போட்டார். இதையொட்டி, ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர், கேஸ் சிலிண்டர் களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி- அதில் சிலிண்டரின் விலை ரூ.1,115 என எழுதி பதிலடி கொடுத்தனர்.
இதனிடையே, ஹைதராபாத்தில் நடை பெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சட்ட மேலவை உறுப்பினர் கே.கவிதா பேசியுள்ளார். அப்போது, சிலிண்டரில் மட்டுமல்லாது, விலை உயர்த்தப் பட்ட அனைத்துப் பொருட்களிலும் மோடி படத்தைப் போடுவோம் என்று கூறியுள்ளார். “அவர் (நிர்மலா சீதாராமன்) வந்தது நல்லது. விருந்தினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அவர், ரேசன் கடைக்குச் சென்று பிரதமரின் படம் போடாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சண்டைபோட்டார். பிரதமரின் படங்கள் ரேசன் கடைகளுக்கு வெளியே வைக்கப்படுவதில்லை. நேரு காலத்திலோ, மன்மோகன் சிங்கின் காலத்திலோ அல்லது வாஜ்பாய் காலத்திலோ கூட யாருடைய படங்களையும் போட்டதில்லை. சீதாராமன்ஜி நீங்கள் பிரதமரின் படங்களை வைக்க விரும்பினால் நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். பாஜக-வின் ஆட்சியில் விலை உயர்த்தப்பட்ட பொருட்களில் எங்கள் கட்சி, பிரதமர் மோடியின் படங்களை இடம்பெறச் செய்யும். எரிவாயு சிலிண்டர்கள், யூரியா பாக்கெட்டுக்கள், பெட்ரோல் -டீசல் நிலையங்கள், எண்ணெய் மற்றும் பருப்பு பாக்கெட்டுகளிலும் பிரதமரின் படத்தை வைப்போம். எங்கெல்லாம் செலவுகள் அதி கரிக்கிறதோ, அங்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைப்போம்” என்று கவிதா தெரிவித்துள்ளார்.