நூல் வெளியீட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுக்கதை
புதுதில்லி, அக்.13- சாவர்க்கரை, பிரிட்டிஷாருக்கு கருணை மனு எழுதுமாறு கூறியதே மகாத்மா காந்திதான் என்று பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உதய் மகுர்கர், சிராயு பண்டித் ஆகியோர் எழுதிய “வீர் சாவர்க்கர்: பிரிவினையைத் தடுக்கக்கூடிய மனி தன்” (Veer Savarkar: The Man Who Could Have Prevented Partition) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, தில்லியில் உள்ள அம்பேத்கர் பன்னாட்டு மையத்தில் நடைபெற் றது. இதில் பங்கேற்றுப் பேசுகை யில்தான், ராஜ்நாத் சிங் மேற்கண்ட வாறு கூறியுள்ளார். “சாவர்க்கருக்கு எதிரான ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறும் போக்கு அதிகரித்துள்ளது. சாவர்க் கர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சிலர் உண்மைகளை மறைத்து பொய் களை கூறி வருகின்றனர். பொதுவாக ஒரு சிறைவாசிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு என்றாலும், அவர் தனது விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதே உண்மை. காந்தியின் அறி வுறுத்தலின் பேரிலேயே விநாயக் தாமோதர் சாவர்க்கர் கருணை மனு அளித்தார். சாவர்க்கரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் ததே மகாத்மா காந்திதான்” என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். “நாட்டின் கலாச்சார ஒற்றுமை யில் சாவர்க்கரின் பங்களிப்பு புறக்க ணிக்கப்பட்டு வருகிறது.
சவார்க்க ரின் அரசியல் சிந்தனைகளை பாசி சத்தோடு இணைத்துப் பேசுகின்ற னர். தீவிர இந்துத்துவா சிந்தனை கொண்டவர் என்றாலும், கடைசி வரை ஒரு யதார்த்தவாதியாகத்தான் சாவர்க்கர் செயல்பட்டு வந்தார்” என சப்பைக்கட்டு கட்டியிருக்கும் ராஜ் நாத் சிங், “கொல்லப்பட்ட சிங்கத்தை விட வேட்டைக்காரன் பார்வையில் வனத்தைப் பற்றிய கருத்தாக்கம் கட்டமைக்கப்படுவது போல, மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் சாவர்க்கரை பாசிஸ்ட் என்று தவறாக சித்தரித்து வருகின்றனர்; மோடிக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன” என்று புலம்பியுள்ளார். மேலும், “சாவர்க்கரோடு நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டி ருக்கலாம். ஆனால் சாவர்க்கரை கீழ்த்தரமாகப் பார்ப்பது சரியல்ல!” என்று அழாத குறையாக பேசி யுள்ள ராஜ்நாத் சிங், “சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கரின் பங்க ளிப்பை இழிவுபடுத்தும் செயலை இனியும் பொறுத்துக் கொள்ள முடி யாது” எனவும் ஆவேசப்பட்டுள்ளார்.
இந்து மகா சபையை நிறுவியவர் களில் ஒருவரான வி.டி. சாவர்க்கர், பிரிட்டிஷ் ஆட்சியில் 50 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தன் மூலம் 12 ஆண்டுகளுக்கு உள்ளேயே விடு தலை செய்யப்பட்டவர் ஆவார். “பரிதாபகரமான நிலையில் இருக்கும் என்மீது இரக்கம்காட்டி சிறையிலிருந்து விடுதலை செய் தால், உயிர் உள்ளவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வேன்; தாயாக இருக் கும் பிரிட்டிஷ் மகாராணியே எங்க ளுக்கு கருணை காட்ட வில்லையென் றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன்?” என்று சாவர்க்கர் எழு திய மன்னிப்புக் கடிதங்கள் பிரபல மானவை.
1911, 1913, 1921, 1924 என பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மன் னிப்புக் கடிதம் எழுதியதன் மூலம் அவர் விடுதலையும் ஆனார். ஆனால் மகாத்மா காந்தி கூறியே சாவர்க்கர் மன்னிப்புக் கடி தங்கள் எழுதியதாக ராஜ்நாத் சிங் புதிய கதையை கூறியுள்ளார். மகாத்மா காந்தி, இந்தியாவுக்கு வந்ததே 1915-ஆம் ஆண்டுதான். அதற்கு முன்ன தாகவே சாவர்க்கர் இரண்டு மன் னிப்புக் கடிதங்களை எழுதி விட்டார். அதேபோல காந்தி காங்கிரசுக்கு தலை மையேற்றது 1924 ஆம் ஆண்டு. இதற்கு உள்ளாக மேலும் 2 மன் னிப்புக் கடிதங்களை சாவர்க்கர் எழுதி விட்டார். 1911 துவங்கி 1924 வரை மன் னிப்புக் கடிதம் எழுதுவதையே சாவர்க் கர் வேலையாக வைத்திருந்த நிலை யில், அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ, பழியைத் தூக்கி காந்தி மீது போட் டுள்ளார். இவை ஒருபுறமிருக்க, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில், 7-ஆவது குற்றவாளியாக நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டவர்தான் வி.டி. சாவர்க்கர் என்பதும், அவர்தான் கோட்சேயின் குருநாதர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.