புதுதில்லி, செப்.21- எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ மூலம் வழக்கு பதிவு செய்யப்படுவது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விடவும், மோடி ஆட்சியில் 35 சதவிகிதம் அதிகரித்திருப்பது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங் கிரஸ் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலை வர்கள் மீதான சிபிஐ விசாரணை 60 சதவிகி தமாக இருந்த நிலையில், அது மோடி தலைமை யிலான பாஜக ஆட்சிக் காலத்தில் 95 சதவிகி தமாக அதிகரித்துள்ளது. கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை யிலான- மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சிபிஐ விசா ரணை வளையத்தில் 72 அரசியல் தலைவர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 43 பேர், அதா வது 60 சதவிகிதம் பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 29 பேர் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், இதுவே, 2014 முதல் தற்போது வரை- நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், 124 அரசியல் தலைவர்கள் சிபிஐ விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்றால், இவர்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 95 சதவிகி தம் பேர். அதாவது 124 பேரில் 118 பேர் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். பாஜகவைச் சேர்ந்தவர்கள் வெறும் 6 பேர் மட்டுமே ஆவர். மன்மோகன் சிங்-கின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தை விடவும், மோடியின் 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிகமானோர் மீது சிபிஐ வழக்கு போடப்பட்டுள்ளது. 72 என்ற எண் ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்க்கட்சிகளில் அதிகபட்சமாக- மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கி ரசை சேர்ந்த தலைவர்கள் 30 பேர் சிபிஐ விசா ரணை வளையத்தில் உள்ளனர். இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 பேர், ராஷ்டி ரிய ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தலா 10 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் 6 பேர், பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி யைச் சேர்ந்தவர்கள் தலா 5 பேர் சிபிஐ விசார ணையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கட்சிகளுக்கு அடுத்தபடியாக, அதி முக, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தலா 4 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 3 பேர், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தெலுங்கானா முதல் வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து தலா ஒருவர் மற்றும் ஒரு சுயேச்சை ஆகியோர் சிபிஐ விசாரணையில் கொண்டுவரப்பட்டுள்ள னர். இதுதொடர்பான புள்ளிவிவரங்களைக் கூறும் மற்றொரு கணக்கு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சியில் 4 முன்னாள் முதல்வர்கள் மீது சிபிஐ வழக்கு போட்ட நிலையில், பாஜக ஆட்சிக் காலத்தில் 12 முன்னாள் முதல்வர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2 அமைச்சர்கள், 13 எம்.பி.க்கள், 15 எம்எல்ஏ-க்கள், ஒரு முன் னாள் எம்எல்ஏ, 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது வழக்கு போடப்பட்டது என்றால், இது பாஜக ஆட்சியில் 10 அமைச்சர்களாகவும், 34 எம்.பி.க்கள், 27 எம்.எல்.ஏ-க்கள், 10 முன்னாள் எம்எல்ஏ-க்கள், 6 முன்னாள் எம்.பி.க்கள் சிபிஐ விசாரணைக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.