புதுதில்லி, செப்.15- இந்தியாவில் பட்டியல் வகுப்பினர், பழங் குடியினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்கள் வருவாய் ஈட்டுவதிலும் கூட பாகுபாட்டைச் சந்திப்பதாக, ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ (Oxfam India) நிறுவனத்தின் ‘இந்திய பாகுபாட்டு அறிக்கை- 2022’ (India Discrimination Report 2022) மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதாவது, இந்தியாவிலுள்ள பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியோர், சமூகத்தில் பல்வேறு விதமான பாகுபாடுகளை, ஒதுக்குதல்களை, ஒடுக்கு முறைகளைச் சந்தித்து வருகின்றனர். எல் லோரையும் போல சமூகத்தில் உரிய மதிப்பு டன் நடத்தப்படுவது, உரிமைகளை அனு பவிப்பது, அரசியல் அதிகாரத்திற்கு வரு வது, எளிதாக கல்வி வாய்ப்பைப் பெறுவது ஆகியவை இப்போதும் இவர்களுக்கு சாத்தியமற்றதாகவே உள்ளது. ஏனைய சமூ கப் பிரிவினரால் தொடர்ந்து பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலைவாய்ப்பு மற்றும் அந்த வேலைக்கு உரிய ஊதியம் பெறுவதி லும் பாகுபாட்டை எதிர்கொள்வதாக ‘ஆக்ஸ் பாம் இந்தியா’ தற்போது கூறியுள்ளது. 2004-05 நிதியாண்டு முதல் 2019-20 நிதி யாண்டு வரையிலான அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றிய தரவுகளை அடிப்ப டையாகக் கொண்டு, ‘இந்திய பாகுபாட்டு அறிக்கை- 2022’-ஐ ஆக்ஸ்பாம் இந்தியா தயா ரித்துள்ளது. அதில் இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வரலாற்று ரீதியாக, ஒடுக்கப்பட்ட சமூ கங்களான பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங் குடியினர், மற்றும் முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினர் வேலைகள், வாழ்வாதா ரங்கள் மற்றும் வேளாண் கடன்களை அணுகு வதில் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள் கின்றனர். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி யினர் சம்பாதிப்பதைக் காட்டிலும், ஏனைய சமூகத்தினர் மாதம் ரூ. 5 ஆயிரம் கூடுதலாக சம்பாதிக்கின்றனர். ஏனைய சமூகத்தினரை விட பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் 41 சதவிகிதம் குறைவாக ஊதியம் பெறு கின்றனர். முஸ்லிம்கள் இன்னும் குறைவாக ஊதி யம் பெறுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர் களை விட முஸ்லிம்கள் ரூ. 7 ஆயிரம் குறை வாக ஊதியம் பெறுகின்றனர். 2019-20ஆம் ஆண்டு கணக்கின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நகர்ப்புற முஸ்லிம்களில் மாத வருவாய் பெறுபவர் களின் எண்ணிக்கை 15.6 சதவிகிதம் என்றால், முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை 23.3 சதவிகிதமாகவும் உள்ளது. கிராமப்புறங்களில் சாதாரண வேலை வாய்ப்புகளைப் பெறுவதில், பட்டியல் - பழங் குடி வகுப்பினரும் பாகுபாட்டை எதிர்கொள் கின்றனர்.
கொரோனா காலத்தில், கிராமப்புற முஸ் லிம்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் 17 சதவிகிதம் என்ற கூர்மையான அதிக ரிப்பைக் கண்டுள்ளனர். பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் 5.6 முதல் 28.3 சதவிகிதம் வரையும், பிற வகுப் பினர் 5.4 முதல் 28.1 சதவிகிதம் வேலை யின்மையைச் சந்தித்த நிலையில், முஸ்லிம் கள், 11.8 சதவிகிதம் முதல் 40.9 சதவிகிதம் வரை வேலையின்மையை எதிர்கொண்டுள் ளனர். அதேபோல, கிராமப்புற முஸ்லிம்கள் தங்களின் வருவாயிலும் அதிகபட்சமாக 13 சதவிகித சரிவைக் கண்டுள்ளனர். இது முஸ்லிம் அல்லாதவர்களிடம் 9 சதவிகித மாகவே இருந்துள்ளது. 2019-20இல் பட்டியல் வகுப்பினர் - பழங் குடியினரிலும், ஏனைய வகுப்பினரிலும் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு இடை யிலான ஊதிய வித்தியாசம் 79 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளது. முந்தைய ஆண் டைக் காட்டிலும் 2019-20-இல் இந்த வித்தி யாசம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில், சுயதொழில் செய் யும் பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் வருமானம், பிறரை விட 10 சதவிகிதமும், முஸ்லிம்கள் வருமானம் பிறரை விட 18 சதவிகிதமும் குறைந்துள்ளது.
2017-ஆம் ஆண்டில், பட்டியல் - பழங் குடி வகுப்பினரில் குறைந்தபட்ச வருமானம் ஈட்டும் 20 சதவிகித வருமானக் குழுவைச் சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அதே வருமானக் குழுவில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும்போது 1.7 மடங்கு குறைவான மருத்துவமனை வசதிகளையே பெற்றுள்ளனர். இதேபோல, நகர்ப்புறங்களில் பொதுப் பிரிவினர் சராசரியாக மாதம் 20 ஆயிரத்து 346 ரூபாய் வருவாய் ஈட்டும் நிலையில், பட்டியல் - பழங்குடியினரின் சராசரி வரு மானம் 15 ஆயிரத்து 312 ஆகவே உள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் பட்டியல் - பழங்குடியினரை விட பொதுப் பிரிவினர் 33 சதவிகிதம் அதிகம் சம்பாதிக்கின்றனர். இதுபோலவே, சுயதொழில் செய்யும் தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், பொதுப் பிரிவினரின் சராசரி மாத வரு மானம் ரூ. 15 ஆயிரத்து 878 ஆகவும், பட்டி யல் - பழங்குடி வகுப்பைச் சேர்ந்த தொழிலா ளர்களின் சராசரி மாத வருமானம் ரூ. 10 ஆயி ரத்து 533 ஆகவும் உள்ளது. சுயதொழில் செய்யும் பொதுப்பிரிவினர், சுயதொழில் செய்யும் பட்டியல் - பழங்குடியினரை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம் சம்பாதிக்கின்ற னர்.
முஸ்லீம் அல்லாதவர்களுடன் ஒப்பிடு கையில், சம்பளம் பெறும் வேலைகள் மற்றும் சுயதொழில் மூலம் வருமானம் பெறுவதில் முஸ்லிம்கள் தொடர்ந்து பல வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். 2004-05ல் நகர்ப்புற முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் எதிர்கொள்ளும் பாகுபாடு 59.3 சத விகிதமாக இருந்தது. இது 16 ஆண்டுகளில் ஒன்பது சதவிகிதம் அதிகரித்து, 2019-20இல் 68.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வழக்கமான ஊதியம் பெறும் முஸ்லிம் அல்லாதவர்கள் சராசரி யாக 20 ஆயிரத்து 346 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில், முஸ்லிம்கள் 13 ஆயிரத்து 672 ரூபாய் என்ற அளவில், ஒன்றரை மடங்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். முஸ் லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் 49 சதவிகிதம் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
சுயதொழில் செய்யும் முஸ்லிம் அல்லா தவர்கள் சராசரியாக ரூ. 15 ஆயிரத்து 878 சம்பாதிக்கிறார்கள். அதே சமயம் சுய தொழில் செய்யும் முஸ்லிம்கள் நகர்ப்புற சுயவேலைவாய்ப்பில் அதிகப் பிரதிநிதித்து வத்தைக் கொண்டிருந்தும் கூட 11 ஆயிரத்து 421 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் சுயதொழிலில் முஸ்லிம்களை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பா லும் பட்டியல் - பழங்குடி வகுப்பினராக இருந் தாலும், விவசாயத்திற்கான கடன்களை வங்கிக் கடன்களை அவர்களால் பெற முடிய வில்லை. இதிலும் சாதி தடையாக உள் ளது. முற்பட்ட சாதியினர் பெறும் கடன் பங்கு களில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறை வாகவே பட்டியல் - பழங்குடி வகுப்பினருக்கு கடன் கிடைக்கிறது. இவ்வாறு ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ வெளி யிட்டுள்ள ‘இந்திய பாகுபாட்டு அறிக்கை- 2022’ தெரிவிக்கிறது.