states

img

இவர்களை கை பிடித்து மேலும் வாசிக்க... - என்.சிவகுரு

இந்த புத்தகத்தின் அட்டையை பார்த்தபோது. ஏன் நூலாசிரியர் பாக்கியம் அப்படி ஒரு  தலைப்பை தேர்ந்தெடுத்தார் என யோசனை எழுந்தது. 11 தலைப்புகளில் வாசகனுக்கு அவர் கடத்திச் செல்லும் நேர்த்தியை முழுமையாக வாசித்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. முகமது அலி எனும் உலகப்புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரனின் மகத்துவம்..அவன் அனுபவித்த கொடுமைகள், எதிர்கொண்ட பிரச்சனைகள், ஒரு முறை அல்ல பல முறை நிறவெறியால் அந்த வீரன் பட்ட துயரங்கள்- அதிலிருந்து மீண்டு எழுந்து, உலகம் போற்றும் குத்து சண்டை வீரனாக மாறிய பயணம் துவங்கி தண்ணீர் சுழலில் சிக்கி வெளி வர முடியாமல் தத்தளிப்பவனை போல புத்தகம் நம்மை வெளியே விடவேயில்லை… அத்தனை ஆளுமைகள்.  ஒரு வானவில்லைபோல பதினோரு பேரின் ஆழமான தடங்கள் நாம் பலர் நாளிதழ்களிலும், சில இல்லங்களிலும் மறைந்த முன்னோர்கள் பற்றிய விவரங்களை  பார்ப்போம்.. இந்த புத்தகத்தில் துவக்கத்தி லேயே உருவம்- அருவம் என அந்த 11 பேரின் ஒரு சிறு முன்னுரையை தோழர் பாக்கியம் தந்துள்ளார். நல்ல தேர்வு தான்..  மாமேதை மார்க்ஸ் பற்றி, மார்க்சியம் பற்றி பேசும் போது, ஏங்கெல்ஸ் கூடவே இருப்பார் அல்லவா? 

என்னால் போராட்டத்தில் ஈடுபடமுடியாத அந்த வினாடி மரணம் என்னை தழுவிக் கொள்ளட்டும் என்றார் ஏங்கெல்ஸ்…என்னே ஒரு தீர்க்கம். அவரும் மார்க்சும் இணைந்த புள்ளிகள்…இருவருமாக பயணித்து செய்த மகத்துவம் மிக்க பணிகள், மூலதனக் குவியல், பொருள்முதல்வாதத்தின்  சிறப்புகள், வர லாற்றை அணுகிய விதம், நுணுக்கமான அவ ருடைய அறிவுத் திறன் என அனைத்தையும் நூலாசிரியர் விளக்கமாகத் தந்துள்ளார்.  இந்த புத்தகத்தின் இன்னுமொரு சிறப்பு மக்சிம் கார்க்கி, தோழர் லெனினைப்பற்றி எழுதியது மிக நேர்த்தியாக வந்துள்ளது. “தாய்”  எனும் ஆகப்பெரும் இலக்கிய பொக்கிஷத்தை நமக்களித்த கார்க்கி லெனின் அவர்களின் மேன்மையை விவரிக்கும் விதத்தை படிக்கும் போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகின்றன. ஏன் ?  மக்சிம் கார்க்கி வார்த்தைகளில் தன்னட க்கத்தின் சிகரம் லெனின்.. தன் மக்களுக்காக  தன்னை எப்படியெல்லாம் மாற்றி கொண்டார்…அவர்கள் நலனுக்காக செய்த தியாகங்கள் என்ன? ஒரு இலக்கிய ஆளுமை தான் நேசித்த தலைவனைப் பற்றி உருகி, உருகி எழுதியதை படிக்க ஆசையா? இதில் தந்துள்ளார் தோழர் பாக்கியம். படியுங்கள் .  வரலாறு திரித்துச் சொல்லப்படுவதால், முந்தைய வரலாறுகளில் எதை எப்படி பகுப்பாய்வது, எது உண்மையான வரலாறு என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால்  அறிஞர் டி.டி.கோசாம்பியை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அந்த அறிவாளுமையை நமக்கு அறிமுகம் செய்வது மட்டும் நூலாசிரியரின் வேலை இல்லை…அதன் மூலமாக உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள கோசாம்பி செய்த பணிகளைத் தெரிந்து கொள்வது, அப்படியே அவரின் திறனாய்வுகளைப் படிக்க துவங்குவது..அதிலிருந்து கற்பது என அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது தானே ஒரு நூலின் வெற்றி… 

பாபாசாகேப் அம்பேத்கர் பற்றி இன்றள விலும் நாம் படிக்க , கற்றுக் கொள்ள, பின்பற்ற  வேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளன. அவ ரின் பணியும்,எழுத்தும் ஒரு பெருங்கடல்.. ஆழ மானதும் கூட..  அவர் சந்தித்த அவமானங்கள், கொடுமைகள் எண்ணில் அடங்காதவை. அந்த தீண்டாமை கொடுமைகள் இன்றும் தொடர்கிறது. நவீன வடிவங்கள் எடுக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து அவர் சிந்திக்காத நேரமே இல்லை. அவர்களின் வாழ்வியல் மேன்மைக்காக ,பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்காக பாபாசாகேப் செய்த போராட்டங்கள் மகத்தானவை. இந்த கட்டுரையை வாசித்த பிறகு நிச்சயமாக நாம்  அம்பேத்கரை மீண்டும் வாசிக்க துவங்கு வோம்.  தனிக்கொடி எனும் பி.எஸ்.தனுஷ்கோடி… ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தலைவர். எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து அவர் செங்கொடி இயக்கத்தில் இணைத்து கொண்டார். எம்மாதிரியான போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். அதன் மூலம் உரிமைகள் எதுவுமே இல்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளிகளை எப்படி செங்கொடி சங்கத்தில் கீழ் இணைத்தார்.கக்கத்தில் இருந்த துண்டு எப்படி தோளுக்கு வந்தது என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. அதில் தோழர் தனுஷ்கோடியின் பங்களிப்பு என்ன?  இவரின் வரலாறு செங்கொடி இயக்கம் உருவாக்கப்பட்டதின் வரலாறு. சாதியமும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கும் நம் சமூகத்தின் போராட்ட வரலாறு. ஒன்றை விட்டு மற்றொன்றை எதிர்த்துப் போராடுவது வீண் வேலை. வெற்றியும் ஈட்டாது. அப்படிச் செய்ய வேண்டிய அர்ப்பணிப்பான பணியை அவர் எங்ஙனம் செய்தார், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன என்பதே அவரின் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.  

வி.பி.சிந்தன் ..தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் மந்திரப் பெயர்..எப்படி இவரால் மட்டுமே எல்லாம் முடிந்தது. இனிப்பை நோக்கி படையெடுக்கும்   எறும்புகளைப் போல், ஏன் தமிழக தொழிலாளிகள் இவரின்  பின்னால் அணி திரண்டனர்.. அவரின் தனி திறமைகள்… உரிமைகளை தொழிலாளி களுக்கு எடுத்துரைக்கும் லாவகம்..எது அவர்களின் முதன்மைப் பிரச்சனை.. எந்த கோரிக்கையை எடுத்தால் அவர்களை இணைக்க முடியும் என்பதை துல்லியமாகத் தெரிந்ததால் தான் அவரால் ஈர்க்க முடிந்தது. அதைச் செய்த அம்மாமனிதனை தெரிந்து கொண்டு அவர் வழியில் பயணப்படுவதை நம் கடமையாகச் செய்திட வேண்டாமா ?  நிறைவாக பூலித்தேவன் எனும் விடுதலை போராட்ட வீரனை பற்றி பதிவிட்டு இந்த புத்த கத்தை முடித்துள்ளார்.. நான் கூட யோசித்தேன் இந்த மாவீரன் முதலில் அல்லவா இருந்திருக்க வேண்டும். ? இல்லை தோழர் பாக்கியம் வரிசைப்படுத்தியது சரியே ஏன்? தேசம் காப்பதே இன்றைய பெரும் பணி.. வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சமர் புரிந்த அந்த மாவீரன் செய்த அளப்பரிய பணி நமக்கு எப்போதும் உத்வேகம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நிறைவாக அவரைப்பற்றி பதிவிட்டுள்ளார். தோழர் பாக்கியம் இன்றைய தேவையை கருத்தில் கொண்டே இந்த நூலை தருகிறேன் என தன்னுரையில் சொல்லியுள்ளார்.அது  முற்றிலும் உண்மையே. இந்தப் புத்தகத்தின் மூலமாக நாம் இந்த “அருவ ஜீவிகளின் “ எழுத்தை, களப்பணியை, சிந்தனையை உள்வாங்கிக் கொண்டால் அதுவே இந்த படைப்பின் வெற்றி. அவர்களை படிப்போம். அவர்களின் வழியில் பயணிப்போம்.

;