states

புயல் எச்சரிக்கை எதிரொலி: மீனவர்கள் வீடுகளில் முடக்கம்

வேதாரண்யம், நவ.21-  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் டெல்டாவில் 27,500 மீனவர்கள் வீடுகளில்  முடங்கியுள்ளனர். நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரு கிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.  புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைகாற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாகை துறை முகத்தில் திங்களன்று 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் 300 விசைப் படகு, 3,500 பைபர்கள் படகுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் திங்களன்று கடலுக்கு செல்லவில்லை.

வேதாரண் யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், மணியன் தீவு மீனவர்கள் 6-ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மேலும் துறைமுகங்களில் படகுகள் பாது காப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  மயிலாடுதுறை மாவட்டத்தில் பழையாறு, கொடியா பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார், மரவாமேடு, வான கிரி, தரங்கம்பாடியை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் 2-ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் 3,000 விசைப்படகு, 7,000 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும்  ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 2,500 மீனவர்கள் 3-ஆவது நாளாக கடலுக்கு செல்ல வில்லை. இதனால் 2 மீன்பிடி இறங்கு தளங்களில் 570 விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் துறைமுகத்தில் திங்களன்று 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. 14 மீனவர்கள் கைதை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் ஏற்கனவே கடந்த 5 நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல் லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-ஆவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 700 விசைப் படகு, 500 பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.