states

மாணவர்களிடம் சாதி ரீதியாக ஒருமையில் பேசிய உதவிப் பேராசிரியரை விசாரிக்க தனிக்குழு அமைப்பு

கும்பகோணம், அக்.8 - கும்பகோணம் அரசினர் ஆண்கள் கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஒருவர் சாதி ரீதியாக மாணவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் ஆண்கள் கல்லூரி யில் (தன்னாட்சி) புவியியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர் மாணவர்களை சாதி ரீதியாக ஒருமையில் பேசியதாக கூறி, உதவிப் பேராசிரி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்து, சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், மாநில எஸ்.சி, எஸ்.டி. ஆணையம், தமிழக அரசின் தலைமை செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் அனுப்பி இருந்தனர். இந்த புகாரை தொடர்ந்து குழு அமைக்க உத்தர விடப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி முதல்வர் (பொ) மீனாட்சிசுந்தரம்  தலைமையில் 7 பேராசிரியர்களைக் கொண்டு தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் சமயத்தில் வகுப்பில் இருந்த மாணவர்கள், புவியியல் துறை மாணவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அப்போது பணியிலிருந்த பேராசிரியர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் இந்த விசாரணையில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு, கல்லூரி மாணவர்கள் பிரதிப், மணிகண்டன், அஜய் உள்ளிட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். விரைவில் விசாரணையை முடித்து கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.