states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பூஜ்ஜிய கட்-ஆப்’பிற்கு எதிரான மனு தள்ளுபடி!

புதுதில்லி, செப். 25 - ‘நீட்’ பிஜி (NEET-PG) தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கறி ஞரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  ‘நீட் பிஜி கட்-ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, திங்களன்று விசார ணைக்கு பட்டியலிடப்படாத நிலை யிலும் அவசர மனுவாக விசாரிக்க வேண்டுமென, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் கோரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசின் முடிவை எதிர்க்க மனுதாரருக்கு உரிமையில்லை என்று கூறி, ‘நீட்’ பிஜி தேர்வு கட்-ஆப் மதிப் பெண் குறைப்புக்கு எதிரான பொது நலன் வழக்கை, உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.;

சந்திரபாபு நாயுடு மனுவை  அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வ ரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு  ரூ.371 கோடி ரூபாய் ஊழல் வழக்கு  தொடர்பாக செப். 8 அன்று கைது செய்யப்  பட்டு, நீதிமன்றக் காவலுடன் ராஜ மகேந்திரவர்மம் (ராஜமுந்திரி) சிறையில்  அடைக்கப்பட்டுள்ள நிலையில், சந்திர பாபு நாயுடுவை காவலில் எடுத்து விசா ரிக்க ஊழல் தடுப்பு படை போலீசார் (சிஐடி)  விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்தனர். சந்திரபாபு நாயுடுவை  2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க  விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் அனுமதி  வழங்கிய நிலையில், சிஐடி காவல் ஞாயி றன்று நிறைவடைந்தது. தொடர்ந்து சந்திர பாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை மேலும்  11 நாட்கள் (அக். 5 வரை) நீட்டித்து விஜய வாடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தர விட்டுள்ளார். இந்நிலையில், சனியன்று சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து  செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எடப்பாடியின் ரூ.4,800 கோடி ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ் சாலைத் துறையை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ் சாலை காண்ட்ராக்ட் பணிகளை தனது உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது,  வண்டலூர் - வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு செய்தது  உள்ளிட்ட ரூ. 4 ஆயிரத்து 800 கோடி அளவிற்கான ஊழல் புகாரில் சிக்கினார்.இது தொடர்பான வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் எதிர்கட்சியினர் மட்டுமே வழக்கு களை எதிர்கொள்வதாகவும் ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை எதிர்கொள்வ தில்லை என்று கூறி, அக்17க்கு விசாரணையை மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தகுதிச் சான்று வழங்குவதில் தனியார்

தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்க தனி யார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு  அரசு முடிவு செய்துள்ளது. “செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர்,  திண்டிவனம், திண்டுக்கல், மதுரை தெற்கு உள்ளிட்ட 18 வட்டாரப் போக்குவரத்து அலு வலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி நிறுவனம் மேற்கொண்டு, 2024  செப்.30-ம்  தேதிக்குள் அரசு அனுமதியளிக்க உள்ளது.

கன்னட அமைப்புகள் முழு அடைப்பு எதிரொலி
சென்னை – பெங்களூரு பேருந்துகள் நிறுத்தம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் பேரில், தமிழகத்துக்கு கூடு தலாக 15 நாட்களுக்கு 5,000 கனஅடி  நீரை தொடர்ந்து திறந்துவிட கர்நாடகா வுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து, கர்நாடகாவில் கன்னட ஆத ரவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து செவ்வாயன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள் ளன. மேலும் செவ்வாயன்று காலை 11  மணிக்கு டவுன்ஹாலில் இருந்து மைசூரு  வங்கி வட்டம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது. தென் இந்தியாவில் கால்பதிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி  கட்சியும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித் துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் திங்க ளன்று இரவு நிறுத்தப்படும் எனவும், செவ்  வாயன்று மாலை 6 மணிக்கு மேல் சூழ லுக்கு ஏற்ப சென்னை, பெங்களூருவில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்  யப்படும் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

சென்னை,செப்.25- திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊர்வலத்தில் கலந்து  கொண்டு பேசிய இந்து முன்னணி மகேஷ், உதயநிதி ஸ்டாலினை இழி வாக பேசியுள்ளார். இதுகுறித்து ஆரணி  திமுக நகர செயலாளர் ஏசி மணி என்பவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஷை வேலூர் சத்துவாச்சாரியில் கைது செய்தனர். அதேபோல், செய்யாறில் நடந்த  கூட்டத்தில், தமிழ்நாடு அரசு மற்றும்  முதல்வர் ஸ்டாலினை, மணலி மனோகர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து நகர திமுக செயலாளர் விஸ் வநாதன் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சென்னையில் கைது செய்தனர். 

இணையவழி பதிவுக்கு மட்டுமே மணல் வழங்க கோரிக்கை

சென்னை, செப். 25- இணையவழியில் பதிவு செய்தால் மட்டுமே மணல் வழங்க வேண்டும் என்று  தமிழ்நாடு மணல் லாரி உரிமை யாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ், தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட காரணங்களால் ஆற்று மணல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தரமற்ற எம்-சாண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, எம்-சாண்ட் உற்பத்தி செயல்முறைகளுக்கு சட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும். மேலும், ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கிறது. அம்மாநில அரசிடம் உடன்படிக்கை செய்து குறைந்த விலையில் மணல் பெற்று, தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.  அதே நேரம், இணையவழியில் பதிவு செய்தால் மட்டுமே மணல் வழங்கும் நடைமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் முறைகேடுகளை தடுக்கலாம். கட்டுமான பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழுவையும் அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில்  ரூ.150 கோடி  அரசு நிலம் மீட்பு

சென்னை, செப்.25- சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே ரூ.150 கோடி  மதிப்பிலான அரசு  நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டி ருந்த கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டது. சென்னை புனித தொகையார் மலை  பகுதியில் கத்திபாரா மேம்பாலம் அருகே அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர்  நிலம் உள்ளது. இதை ஆக்கிரமித்த தனியார் சிலர் கடைகள், குடோன்கள், கிளப் ஆகியவை நடத்தப்பட்டு வந்தன.  இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக் கில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த 28 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அரசு நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள், அரசுக்கு ஒட்டுமொத்தமாக 35 கோடி செலுத்த வேண்டும் என்றும் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண் டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதி காரிகள் 25க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆட்களை வெளியேற்றி கடை களுக்கு சீல் வைத்தனர். தற்போது மீட்கப்பட்ட இடத்தின் மொத்த மதிப்பு ரூ.150 கோடியாகும்.

திருத்தம்

நேற்றைய இதழின் 6ஆம் பக்கத்தில் வந்துள்ள நாவல் வெளி யீட்டு விழா செய்தியில், ‘வர்க்க அரசி யலை கலை அமைதியோடு பதிவு செய்தவர் பா.செயப்பிரகாசம்’ என வந்திருக்க வேண்டும். துறைமுக தொழிலாளர்கள் வேலை  நிறுத்தம் தொடர்பான செய்தியில், வேலை நிறுத்தம் அக்.26 என்றும், அக்.17-19 தேதிகளில் தொழிலாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்றுவது, 19 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்றும் வந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம். -ஆர்