சென்னை, செப்.12- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி திங்களன்று(செப்.12)பணி ஓய்வு பெற்றார். கடந்த 1960ல் ராஜஸ்தானில் பிறந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 2007ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2019-ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுப் பின்னர், பொறுப்பு நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு 2021 நவம்பர் 22 பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். பின்னர், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு திங்களன்று (செப்.12) 62 வயது நிறைவடைவதை அடுத்து, ஒய்வுபெற்றார்.
இதையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத் தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரித்தனர். தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெறுவதால் அவரை தில்லியிலுள்ள கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அதன்படி ஓய்வுக்கு பிறகு ஓரிரு நாட்களில் பதவியேற்க உள்ளார். இதனிடையே தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெறு வதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செவ்வாயன்று ( செப்.13) முதல் பொறுப்பு நீதிபதியாக செயல்பட உள்ள நீதிபதி துரைசாமி, வரும் செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.