states

சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவரும் கேரளம்

உலகின் மிக முக்கியமான 50 சுற்றுலா மையங்களில் கேரளமும் இடம் பிடித்துள்ளது என்பது மிகவும் பெருமைக்குரிய விசயமாகும். பொதுவாகவே இயற்கை எழில் கொஞ்சும் கேரளம் மாநிலம் நீர் நிலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலையழகுகளால் தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது என்பதில் வியப்பில்லை. கோவிட்19 பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துத் துறைகளையும் போலவே கேரளச் சுற்றுலாத் துறையும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்ட சாதுர்யமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளால் நெருக்கயிலிருந்து பல்வேறு துறைகளும் மீண்டெழுந்து வந்தன. கேரளப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறையும் மீண்டும் புதுப்பொலிவு பெற்று சுற்றுலா விருந்தாளிகளை அன்புடன் வரவேற்று அரவணைத்துக் கொள்கிறது. ஆலப்புழா, மூணாறு, தேக்கடி, குட்டநாடு, கொச்சி, எரவிகுளம் தேசியப் பூங்கா, கோவளம், வர்க்கலா கடற்கரை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கோழிக்கோடு கடற்கரை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை விருந்தளிக்கும் இடங்களாகவே திகழ்கின்றன.

ஓணம் திருவிழாவின் முன்னோடியாக ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் கேரள சுற்றுலாத்துறையின் சார்பாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சாம்பியன்ஸ் படகுப் போட்டியைக் காண வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள் என்பது சிறப்பக்குரியதாகும். இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களின் மேற்கு எல்லையோரம் அமைந்துள்ள எரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளின் மற்றுமொரு இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத்தளமாகும். இது கேரளாவின் முதல் தேசியப் பூங்காவாகும். கேரள வனத்துறை மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் துறையால் இந்தப் பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. மூணாறு வனவிலங்குள் பாதுகாப்பு பிரிவு மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா, ஆனமுடி சோலை தேசிய பூங்கா, பாம்பாடும் சோலை தேசிய பூங்கா, சின்னார் வனவிலங்குகள் சரணாலயம் போன்ற பல்வேறு தேசியப் பூங்காக்களைப் பாதுகாத்து வருகிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி தாலுகாவிற்குட்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்தில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய நீர்வீழ்ச்சியாகும். 80 அடி உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி கேரளத்தின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். சாம்பியன்ஸ் படகுப் போட்டி, கேரவன் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா ஆகியவற்றின் புதுமையான அனுபவங்கள், பொறுப்புமிக்க சுற்றுலாவின் சிறந்த முன்மாதிரி முதலான எண்ணிலடங்கா சாதனைகளுடன் கேரள சுற்றுலாத்துறை சுற்றுலாப் பயணிகளிள் மனங்களைக் கவர்ந்தது வருகிறது.

;