states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரைப்பகுதியைச் சேர்ந்த முகமது அபு காபியா என்ற பாலஸ்தீன ஆசிரியர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன. அவர் ஓட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மோதியது. விபத்தில் அடிபட்ட காபியாவுக்கு உதவி செய்யாமல், அவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டார்கள். சில நாட்களுக்கு முன்பும், இது போன்றதொரு சம்பவத்தில் ஒரு வாகன ஓட்டுநர் சுடப்பட்டு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தொடக்க கட்ட புள்ளிவிபரங்களின்படி, வலதுசாரிக் கூட்டணிக்கு 44.06 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பும் வலதுசாரிக் கூட்டணிக்கு வெற்றி என்றுதான் புள்ளிவிபரங்களை அளித்தது. 

உலக அளவில் ஏற்பட்டுள்ள தட்பவெப்ப நிலை மாற்றங்கள்தான் பாகிஸ்தானின் தற்போது உருவாகியிருக்கும் வெள்ள நெருக்கடிக்கு காரணம் என்று பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார். வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 77-ஆவது பொது அவைக் கூட்டத்தில் பேசுகையில் அவர் கோரிக்கை வைத்தார். பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மிதக்கும் அவலம் சுமார் 3 கோடி மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற வைத்துள்ளது.

;