states

இந்தியாவில் ஓய்வூதியம் உண்மையில் முன்னேற்றமா? ஊடக அறமா? - க.சுவாமிநாதன்

மெர்சர் சி. எப்.ஏ அமைப்பின் “உலக  ஓய்வூதியம் குறியீடு” - 2022 ஆய்வின் படி இந்தியா பென்சன் திட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது என கூறப்படுகிறது. இப்படித்தான் இச் செய்தியை வெளியிட்ட இந்து பிசினஸ் லைன் (19.10.2022) தலைப்பு தந்துள்ளது. “Pension system has improved” - Survey.

மெர்சர் ஆய்வு
மெர்சர் அமைப்பு சர்வேபடி 2021 இல் 44.3 ஆக இருந்த குறியீடு 2022 இல் 44.4 ஆக உயர்ந்துள்ளது. இதை வைத்தே இப்படி தலைப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் முன்னேற்றமா?  அதற்கு முன்பாக மெர்சர் ஓய்வூதியம் குறியீடு பற்றிய  தகவல்கள்.  44 நாடுகளின் ஓய்வூதியம் திட்டங்கள் பற்றிய ஆய்வு இது. உலக மக்கள் தொகையில் 65 சதவீதம் உள்ள நாடுகள் இவை. மூன்று அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. 

1) போதுமான அளவா?
2) நீடித்து நிலைக்குமா?
3) நம்பகத்தன்மை உண்டா?

இப்போது முடிவுகளுக்கு வருவோம். இச் செய்தி வெளியாகியுள்ள பல வணிக இதழ்கள் தரும் விவரங்கள் இவை. 

உண்மை என்ன?

  1.  2021 இன் மதிப்பெண் 43.3. அதை  2022 மதிப்பெண் 44.4 உடன் ஒப்பிட்டே முன்னேற்றம் என்கிறதுஇந்து பிசினஸ் லைன். ஆனால் 2020 இல் இது 45.7ஆக இருந்தது. 2021, 2022 இரண்டையுமே 2020 உடன் ஒப்பிட்டால் பின்னேற்றமே. 
  2.  
  3. 44 நாடுகளில் 41 ஆவது இடத்தில் 2022 இல் இந்தியா உள்ளது. 2021 இல் 40 வது இடத்தில் இந்தியா இருந்தது. ஒரு இடம் முன்னே என்று நினைக்கலாம். ஆனால் 2021இல்  ஆய்வு நடத்தப்பட்ட 43 நாடுகள் மட்டுமே போட்டியில் இருந்தன. 2022 இல் புதிதாக போர்ச்சுக்கல்லை சேர்த்து 44 நாடுகள். போர்ச்சுக் கல் 24 வது இடத்தில் வந்து விட்டது. ஆகவே 2021 லிலும், 2022 லிலும் இந்தியா கீழே இருந்து 4 வது இடமே. மாப்பிள்ளை பெஞ்சில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 2020 இல் 39 நாடுகளில் 34 ஆவது ரேங்கில் இருந்தது. எங்கே முன்னேற்றம்?
  4. மூன்று அளவுகோல்களில் ஒரு அளவு கோலில் மட்டுமே மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதாவது போதுமான அளவா என்பதில் 2021 இல் 33.5,  2022 இல் 37.6. ஆனால் இந்த அதிக ரிப்பிற்கு காரணம் கணக்கீட்டில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களும் ஆகும்.
  5. இரண்டாவது அளவுகோலில் மதிப்பெண்கள் குறைந்துள்ளன. நீடித்து நிலைக்குமா? என்ற அளவு கோலில் 2021 இல்  41.8. தற்போது 2022 இல் 40.7 ஆக குறைந்துள்ளது. 
  6.  மூன்றாவது அளவுகோலிலும் மதிப்பெண்கள் குறைந்துள்ளன. நம்பகத் தன்மை உண்டா? என்ற அளவுகோலில் 2021 இல்  61. தற்போது 2022 இல் 60.4 ஆக குறைந்துள்ளது. 

ஊடக அறமா?

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 90 சதவீத தொழி லாளர்கள் அத்தக் கூலிகளாக உள்ள தேசத்தில் ஓய்வூதியம் திட்டம் எப்படி பாஸ் மார்க் வாங்கும்! மூன்று அளவுகோல்களில் இரண்டில் மதிப்பெண் குறைந்தாலும், இன்னொரு அளவுகோலில் கணக்கீடு அடிப்படை மாற்றம் செய்ததால் அதிகரித்தாலும் இந்து  பிசினஸ் லைன் தலைப்பு தருகிறது “முன்னேற்றம்” என்று...  செய்தியின் சாரம் தலைப்பில் பிரதிபலிப்பது ஊடக அறம். ஆனால் இந்த செய்தியின் விவரங்களுக்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் உள்ளதா? அறம் எங்கே போனது?