லடாக்கில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
லடாக்கில் புதனன்று காலை 8.07 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி யுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், யூனியன் பிரதேசத்தின் லே பெல்ட்டில் இருந்து வடகிழக்கே 135 கிமீ தொலைவில் இருந்ததாக தேசிய நிலஅதிர்வு மைய அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் வடக்கே 34.92 டிகிரி அட்ச ரேகையிலும், கிழக்கே 78.72 டிகிரி தீர்க்க ரேகையிலும் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நில அதிர்வால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சல் தேர்தல்: காங்கிரஸ் முதற்கட்ட பட்டியல்!
68 இடங்களை கொண்ட இமாசலபிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி, பாஜக 62 வேட்பாளர் களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் 46 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இவர்களில் 19 பேர் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு!
புதுதில்லி, அக்.19- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழ் நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு, மே 21-ஆம் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத் தில் பங்கேற்றபோது படுகொலை செய்யப் பட்டார். இந்தப் படுகொலைக்கான விரி வான சதி பற்றி ‘எம்.டி.எம்.ஏ.’ என்னும் பல்துறை கண்காணிப்பு முகமை அமைக் கப்பட்டிருந்தது. ஜெயின் கமிஷன் பரிந்து ரையின்படி, 1998-ம் ஆண்டு 2 ஆண்டு பத விக்காலத்துடன் இந்த முகமை அமைக் கப்பட்டது. பலமுறை அதன் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டும் பெரிய அளவில் எந்த திருப்புமுனையையும் இந்த முகமை சாதிக்கவில்லை. இந்நிலையில் பல்துறை கண்காணிப்பு முகமையை ஒன்றிய அரசு கலைத்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்டு இருந்தா லும், அதுபற்றிய தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பின் வசமிருந்த விசாரணைப் பணிகள், சிபிஐ- யின் ஒரு பிரிவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
வருவாய்பற்றாக்குறை குறைந்துள்ளது: நிதியமைச்சர்
சென்னை, அக்.19- தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக் குறை 4.1 விழுக்காட்டிலிருந்து 3.8 விழுக் காடாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதனன்று (அக்.19) நடைபெற்ற நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன், “கடந்த 7 ஆண்டுகளிலிருந்ததை விடத் தமிழ்நாட்டின் கடன் பெறும் அளவை, முற்றிலும் குறைத்து முழு அளவில் கடன் பெறாமல் உள்ளோம். இதன் மூலம் மாநிலத்தின் கடன் வாங்கும் திறனை அதிகரித்துள்ளோம்”என்றார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக் குறையைக் குறைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியில் ரூ.1,240 கோடி குறைத்துள்ளோம். இது அனைத்தும் முதலமைச்சர் எனக்குக் கொடுத்த ஊக்கமே காரணம். வரும் காலத்தில் உலகப் பொருளாதார சரிவு ஏற்படாமல் இருந்தால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி சத வீதம் அதிகரித்துக் கொண்டே போகும், பற்றாக்குறை உற்பத்தி சதவீதம் குறைந்து கொண்டே போகும் என்றும் அவர் கூறினார்.
குடிசைக்கு விலக்கு தேவை - எம்எல்ஏ; இடிப்போம் -அமைச்சர்
சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் துணை கேள்வி எழுப்பிய பேர வைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் நீதி மன்ற உத்தரவுப்படி அகற்றப்படுவதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேலிகள் அமைக்கப்படுமா? என்றும் ஏரி புறம்போக்கு நிலத்தில் ஏரிகளுக்கு முன் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டப்பட்டுள்ள குடிசைகளையும் இடிக்கப்படுகிறது. இதனை அரசு கவனத்தில் கொண்டு அந்த பகுதிகளில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப் படுமா? என்றும் வினவினார். இதற்கு பதில் அளித்த மூத்த அமைச் சர் துரைமுருகன்,“ அரசு நில ஆக்கிரமிப்பு கள் அகற்றும் பகுதிகளில் வேலி அமைப்பது என்பது சாத்தியமற்றது. ஏரி நில ஆக்கிரமிப்புகளை அரசு இடிக்க வில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி செய்யவில்லை என்றால் தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு நிலம், பொது சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்வது ஒரு வியாதியாகி விட்டது. அது சரியானபோக்கும் அல்ல. எனவே, பொது சொத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டினால் நிச்சயம் இடிக்கப்படும். வெளியேற்றுவோம்” என்றார்.
25 வருடமாக முடங்கிய திட்டம்!
உசிலம்பட்டி தொகுதி அதிமுக உறுப்பினர் அய்யப்பன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “மதுரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி என்பது உண்மைதான். இது முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமியா கும். எனவேதான் 58 கிராம மக்கள் ஒரு கால்வாய் திட்டம் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏனோ தெரியவில்லை அந்த திட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நிறை வேற்றப்படாமல் முடங்கியே கிடக்கிறது என்றார்.
தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக உயர்வு
தரைப்பாலங்களை சீரமைப்பது குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, “முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 1,281 தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்று வதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 461 தரைப்பாலங்களும் அடுத்த நிதியாண்டில் மேம் பாலங்களாக மாற்றப்படும்” என்றார்.
புதிய நடவடிக்கைகள்
இயற்கை எரிவாயு விலை உயர்வைச் சமாளித்து இவ்வாண்டின் குளிர்கால எரிசக்தி விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இயற்கை எரிவாயு கூட்டு கொள்முதல் செய்வது, ஐரோப்பாவின் இயற்கை எரி வாயு விலை வரம்பை விதிப்பது, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எரிசக்தி விநியோகத்தை ஒருங்கிணைப்பது முத லிய புதிய அவசர நடவடிக்கைகளை ஐரோப்பிய ஆணையம் 18ஆம் நாள் முன்வைத்தது. இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அனுமதியைப் பெற வேண்டும். வரும் 20, 21ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இது குறித்து விவாதம் நடத்துவர்.
அபாயம் அதிகரிப்பு
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சி யான வட்டி விகித உயர்வு கொள்கை காரணமாக, வரும் ஓர் ஆண்டுக்குள் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் அதிகரித்து வருகிறது என்று பல செய்தி ஊடகங்களும் உலக மதிப்பீட்டு நிறுவனங்களும் அண்மை யில் எச்சரிக்கை விடுத்தன. வரும் 12 மாதங்களில் அமெரிக்கா வில் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம் 100 விழுக்காடாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டது.வரும் ஓர் ஆண்டுக்குள் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான சாத்தியம் 63 விழுக்காடு உள்ளது என்று வால் ஸ்ட்ரீட் நாளேடு வெளியிட்ட தகவல் காட்டுகிறது.
வேலை நிறுத்தம்
ஊதியம் உயர்வு மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த கோரி, நவம்பர் 3,5,7ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் செய்வதாகப் பிரிட்டன் இருப்புப்பாதை, கடல் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் 18ஆம் நாள் அறிவித்தது. கடந்த சில மாதங்களில் பிரிட்டன் இருப்புப்பாதை தொழிலாளர்கள் பன்முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வாண்டு வருமானம் 4விழுக்காடு அதிகரித்து அடுத்தாண்டில் மீண்டும் 4விழுக்காடு அதிகரிப்பதென்ற உடன்பாட்டை இப்போது பிரிட்டன் நெட் வொர்க் ரயில் நிறுவனம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று தொழிலாளர் சங்கம் தெரிவித்தது. ஆனால் நல்ல நிபந்தனைகளை வழங்கினாலும் தொழிற்சங்கம் ஒப்புக் கொள்ளவில்லை என்று நெட்வொர்க் ரயில் நிறுவனம் பதிலளித்தது.
ஒப்புதல்!
எண்ணெய் உற்பத்தி செய்யும் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இலங்கையில் எண்ணெய் இறக்குமதி மற்றும் சில்லரை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட முன்மொழிவுக்கு இலங்கை 18ஆம் நாள் செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட முன் மொழிவு இலங்கையில் அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி பற்றாக்குறையைத் தணிக்க உதவிடும் என்று இலங்கை எரிசக்தி அமைச்சர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.