states

மாதர் சங்க மாநாடு: களப்போராளிகளை வரவேற்கத் தயாராகிறது கடலூர்

அனைத்திந்தியஜனநாயக மாதர் சங்கத்தின்மாநில மாநாடு கடலூ ரில் இம்மாதம் நடைபெறவுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கபெண்களும் அவர்களுக்குத் தோளோடு தோள்கொடுத்து பல்வேறு வெகுஜன அமைப்புகளும் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  கடலூர் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக மாநாட்டின் செய்தியைக் கொண்டு செல்லும் பணியில் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  பொதுமக்களைச் சந்தித்து மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்தி வரும் பல பெண்களின் பாதங்கள் நடந்து நடந்து தழும்பேறி நிற்கிறது. சிலரால் காயமான கால்களில் காலணிகளைக் கூட அணிய முடியவில்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்களைச் சந்திக்கின்றனர். அவர்களின் உற்சாகம் எல்லோரையும் பற்றிக்கொண்டு மாநாட்டுப் பணிகளில் ஈடுபட வைக்கிறது.

உற்சாகம்...

“அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநாட்டிற்கு நிதி தாரீர்’’ என்ற பிரசுரங்களைக் கொடுத்து  மக்கள் கொடுக்கும் நிதியுடன் பல அனுபவங்களையும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கின்றனர். கடலூர் மாநகரில் இரண்டு நாட்களில் மட்டும் ஒன்னரை லட்சம் ரூபாயை மக்கள் வாரி வழங்கினர். மாவட்டம் முழுவதும் ஏராளமான தோழர்கள் மாநாட்டுப் பணிகளில் ஈடுபடுவது மட்டுமல்ல, தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி சகோதர உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

தடம் பதித்த போராளி

உழைக்கும் வர்க்கத்தின் உரிமை கேட்ட போராட்ட வரலாற்றில் கடலூர் மாவட்டத்திற்கென தனி இடம் உண்டு. தவறு செய்தது காவல்துறையே, ஆனாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கி தரும்வரை போராடுவதில் மாதர் அமைப்பு சற்றும் ஓய்ந்ததில்லை என்று தமிழகத்திற்கு உரத்த குரலில் அறிவித்த மாவட்டம்.. சிறைச்சாலையிலேயே போராட்டம் நடத்தி உரிமைகளைப் பெற்ற மகத்தான போராளி ஷாஜாதி இம்மாவட்டத்தின் மகத்தான உதாரணம்.

எங்கும் வெண்கொடிகள்...

ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராக விளங்கிய கடலூர் துறைமுக நகரில்தான் மாதர் அமைப்பின் 16வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதி மகாகவி பாரதியின் நினைவு தினத்தில் மாவட்டம் முழுவதும் 16வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மாதர் சங்கத்தின் 16 கொடிகள்  ஏற்றப்பட்டன. மாநாட்டினையொட்டி சகோதர அமைப்புகளுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கருத்தரங்கங்கள், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், விவாத அரங்கம், கலந்துரையாடல் என 16 நிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடலூரில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான விவாத அரங்கம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

வாழ்வின் வலிகள்...

தினம் தினம் அவர்கள் காவல்துறையால் வேட்டையாடப்படுவதும், பொதுவெளியில் புறக்கணிக்கப்படுவதும், ஆணாய் இருந்தபோது முனைவர் பட்ட படிப்பிற்குப் பதிவு செய்து, திருநங்கையாய் மாறிய காரணத்தால் பட்டம் பெற முடியாமல் போனதும், எல்.ஐ.சியில் பாலிசி எடுக்கமுடியாமல் தவிப்பது என தங்கள் வாழ்வின் வலிகளைத் திருநங்கையர்கள் சொன்னபோது வந்திருந்த அனைவரும் கண் கலங்கினர்.

புதிய விடியலின் துவக்கம்

விவாத அரங்கிற்குக்  கடலூர் நகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பார்வையாளர்களாக வந்திருந்த ஒருவர் “இந்த ஆண்டு முதல் ஒரு திருநங்கையின் வாழ்நாள் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக” அறிவித்தபோது அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. இறுதியாக திருநங்கைகளை மாதர் அமைப்பில் உறுப்பினராகச் சேர்த்து அவர்களுக்காக மாதர் அமைப்பு போராடும் என்ற அமைப்பின் முடிவை அறிவித்தபோது அவர்கள் அடைந்த உற்சாகமும், அவர்கள் கண்களில் தெரிந்த நம்பிக்கையும் புதிய விடியலின் துவக்கம். அதேபோல நெய்வேலியில் “நுண் நிதி நிறுவனங்களும் பெண்களின் நிலையும்” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பெண்கள் சொன்ன ஒவ்வொரு கதையும் கல்லையும் கரைக்கும் கண்ணீர் கதைகளாகும். தங்கள் குழுவிலிருந்த ஒரு பெண் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதைக் கண்களில் நீர் கசிய, தொண்டையடைக்க ஒரு பெண் பகிர்ந்து கொண்டார். கிராமப்புற வேலையின்மை கடன் உறவை அதிகரித்து, நிதி நிறுவன சுரண்டலின் வேட்டைக்காடாய் எளிய குடும்பங்களை மாற்றுகிறது. இதற்கெதிரான போராட்டமும், மாற்று நடவடிக்கைகளும் உடனடியாக தேவை என விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் இறுதியில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுய உதவிக் குழுக்களைத் துவக்குவது என முடிவு செய்யப்பட்டுக் கடந்த செப்டம்பர் 10  ஆம் தேதியன்று மாவட்டத்தில் முதல் கட்டமாக பெரியகாட்டுபாளையம், ஆபத்தானபுரம் 1, ஆபத்தானபுரம் 2, வடஹரிராஜபுரம், மேலவெளி ஆகிய 5 இடங்களில் முல்லை என்ற பெயரில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மினி மாரத்தான்

மற்றொரு பக்கம், கடலூர் மாநகர மேயர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்க  மினி மாரத்தான் நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்க உள்ளார். இதுவல்லாமல் சதுரங்க போட்டிகள் நடக்க உள்ளது. மேலும் மாதர் அமைப்பின் வீரமிகு வரலாற்று கண்காட்சியும், குடியிருப்போர் கூட்டமைப்பு சார்பில் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட வீரமங்கைகள் ஓவியங்களைத் தாங்கிய வரலாற்றுக் கண்காட்சியும் தயாராகி வருகிறது. ஏற்கனவே பல மாநில மாநாடுகளையும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  அகில இந்திய மாநாட்டையும் நடத்திய அனுபவம் பெற்றவர்கள் கடலூர் தோழர்கள். மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் வாசுகி, வாலண்டீனா, சுகந்தி உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று களத்தில் உள்ள ஊழியர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார்போல எட்டயபுரம் கவிஞனின் கனவான “ஒளிபடைத்த கண்ணோடு, உறுதி கொண்ட நெஞ்சோடு, களிபடைத்த மொழியோடு, கடுமை கொண்ட தோளோடு,தெளிவுபெற்ற மதியோடு, சிறுமைகண்டு பொங்கும்” போர்குணம் கொண்ட ஆயிரமாயிரம் மாதர்களின் பிரம்மாண்டமான பேரணியும்  கடலூரில் நடக்க உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து, பல களப்போராட்டங்களை கண்ட  புதுமைப்பெண்களை வரவேற்கக் கடலூர் தயாராகி வருகிறது. “பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற தமிழகம்’’ என்ற முழக்கத்துடன்,  மாதர் இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நடைபயணம் கடலூர் மண்ணான வடலூரிலிருந்துதான் புறப்பட்டது. இதே கடலூரில் நடைபெற இருக்கும் மாநில மாநாடு தமிழக பெண்களுக்கு புதிய திசை வழியைக் காட்டும் என்ற நம்பிக்கையுடன் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பி.தேன்மொழி  மாநில செயற்குழு உறுப்பினர்





 

;