சென்னை,அக்.16- ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 15 அன்று சென்னை சேப்பாக்கம் சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் சம்மேளன தலைவர் வி.குமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், ஆட்டோ சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், பொருளாளர் இ.உமாபதி, துணை பொதுச்செயலாளர்கள் வி.ஜெயகோபால், ஆர்.முருகன் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தீபாவளியை கொண்டாட முடியாத வறுமை, ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திலும் நிலவுகிறது. எல்லோரும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடும் போது சமூகத்தில் பிரிக்க முடியாத பகுதியாக மாறி இருக்கிற ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திலும் தீபாவளி கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். எனவே ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களில் இருந்து சேர்ந்த பல கோடி ரூபாய் பணம் இருக்கிறது. இந்த நலவாரிய நிதியிலிருந்து நலவாரி யத்தில் பதிவு பெற்ற ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளி யின் குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸாக வழங்கிட தொழிலாளர் நலத்துறை முன்வர வேண்டும்.