ஹவானா, அக்.14- இயான் சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கியூபா, வருங்காலத்தை மனதில் கொண்டு பழைய மரங்களை அகற்றி விட்டு, புதிய மரங்களை நடுவதற்கானப் பெரிய திட்டமொன்றை வகுத்துள்ளது. அண்மையில் கியூபாவைத் தாக்கிய இயான் புயலால் தலைநகர் ஹவானாவில் ஆயிரம் மரங்களுக்கு மேல் சாய்க்கப்பட்டன. பெரும் வேகத்துடன் வீசிய காற்று மற்றும் பெரும் மழைக்குத் தாங்காமல் இந்த மரங்கள் சாய்ந்தன. உடனடியாக சாய்ந்த இந்த ஆயிரம் மரங்களு க்குப் பதிலாகப் புதிய மரங்களை நடும் வேலையை கியூப அரசும், பல அமைப்புகளும் தொடங்கி விட்டன. இந்த உடனடிப் பணியைத் தாண்டி, தலைநகரில் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் பழைய மரங்களையும் அகற்றி விட்டுப் புதிய மரங்களை வளர்க்கப் போகிறார்கள். ஒரே நேரத்தில் இதைச் செய்யாமல் ஒரு கால அட்ட வணையைத் தயாரித்து, அதன்படி மரங்கள் நடப்படும். இதற்குத் தேவையான மரக்கன்றுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதோடு நிற்காமல், தலைநகரில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை 17 லட்சமாக மாற்றும் திட்டமும் உள்ளது. கியூபாவின் விவசாயத்துறை நிபுணர்களில் ஒருவ ரான அலெக்சாண்டர் மோடோலோங்கோ, “மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றன. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்க உதவுகின்றன. இதனால் தலைநகர் ஹவானாவில் கூடுதலாக 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் காடு வளர்க்கத் திட்டமிட்டுள் ளோம்” என்று குறிப்பிட்டார். “இயற்கையோடு இணைந்து வாழ மரங்கள் அடிப்படையானவையாகும். கியூபாவை பசுமையானதாகவும், குளிர்ச்சியானதாகவும் மாற்ற நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான லெய்டிஸ் குரூஸ் தெரி வித்துள்ளார்.