states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எலிசபெத் இறுதிச்சடங்கில் முர்மு பங்கேற்பு!

பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் தனது 96-வது வயதில் அவர்  உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்ச்சிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி  நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதி நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக, குடியரசுத் தலைவர் முர்மு 3 நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்கிறார்.

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்!

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமூகப் பிரிவினரை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி நரிக்குற வர், குருவிக்காரர் என அழைப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அமைச்சரவை முடிவு  செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர், இமாச்சலப்பிர தேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவி னருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபாதைக்கு கெஜ்ரிவால் திடீர் ஆதரவு!

4 ஆண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாதைத் திட்டத் திற்கு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி அரசு முழுமையாக ஆதரவு அளிக்கும் என  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரி வித்துள்ளார். “அக்னிபாதைத் திட்டத்தில் ஒன்றிய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், ஒன்றிய அரசு திட்டத்தை செயல்படுத்தியதால் நாங்கள் அதை முழுமை யாக ஆதரிப்போம். நாங்கள் அக்னிபாதைத் திட்டத்திற்கும் ராணுவத்திற்கும் முழுமையாக ஒத்து ழைப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவினர் வீடுகளுக்கு புல்டோசரை அனுப்பலாமா?

“பாஜக கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடமே எப்படி முறை யாக போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பது என்பதுதான். மேற்கு வங்க அரசும்- ‘போகிஜி  அஜய் பிஷ்ட்’-இன் கொள்கையைப் பின்பற்றி-  பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினர்  வீடுகளுக்கு புல்டோசர்களை அனுப்பினால் என்னவாகும்? பாஜக தனது சொந்த கொள்கையில் நிற்குமா அல்லது பின்வாங்குமா? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் விபத்து: 12 பேர் பலி; 24 பேர் காயம்!

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிராரி பல்லா சாவ்ஜியன் அருகே மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், மண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் ஐந்து பேர் சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்மு நகருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.

கால்களில் கொப்புளம்: ராகுல் இன்று ஓய்வு!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம்’ என்ற நடைப்பய ணத்தை துவங்கியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது கேரளத்தில் இருக்கிறார்.  தினமும் 25 கிலோ மீட்டர் என்ற வகையில், 7 நாட்களாக நடைப்பயணத்தை தொடர்ந்து வரும் ராகு லுக்கு தற்போது பாதத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் எனது ஒற்றுமை பயணம் தொடரும் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், ராகுல் காந்தி வியாழனன்று ஓய்வெடுக்க உள்ளதாக நடைப்பயணக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காவலர் பணியில் 3-ஆம் பாலினத்தவருக்கு ஒதுக்கீடு

கர்நாடகாவில் காலியாக உள்ள 3,484 ஆயுதப்படை காவலர் பணியிடங்களை நிரப்பும் பணி  மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் முதல்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு இடங்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 3,484 பணியிடங்களில் 79 பணியிடங்கள் மூன்றாம் பாலினத்த வர்களுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்யாண் கர்நாடகா பகுதியில் 420 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 11 பணியிடங்கள் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வெளியில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் வீரர்கள்!

“கிரிக்கெட் உலகில் இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை நான் கிரிக்கெட் பார்க்க  மாட்டேன். டி20 உலகக் கோப்பைக்கான வீரர்களைத் தேர்வு செய்தது எனக்கு ஆச்சரியமாக  இருக்கிறது. சமி, சிராஜ், கலீல் அகமது போன்ற வீரர்களை வெளியில் அமர வைத்தது ஆச்ச ரியமாக உள்ளது”என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான தவுசீப் ஆலம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குஜராத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டட பணிகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் லிப்ட் ஒன்று இயங்கி வந்துள்ளது. புதனன்று வழக்கம் போல கட்டடப் பணியாளர்கள் பணி யில் இருந்தபோது அந்த லிப்ட் திடீரென்று அறுந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

‘ஆம் ஆத்மி’ அரவிந்த் என்ற நடிகரின் கட்சி!

“நரேந்திர மோடிக்கு பிறகு சோனியா காந்தியை பிரதமராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக நான்  கேள்விப்பட்டேன்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி ஒன்றுக்கு பதில ளித்திருந்தார். இந்நிலையில், “ஆம் ஆத்மி கட்சியை ‘அரவிந்த் அட்வர்டைஸ்மென்ட் கட்சி’ என்று தான் அழைக்க வேண்டும். பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் வழங்க பணமில்லை என்று பேசிக் கொண்டு, மறுபுறம் குஜராத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ. 36 கோடிக்கு பஞ்சாப் அரசு மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் குமார் பதிலளித்துள்ளார்.

முன்னாள்  அமைச்சர் மறைவு

கடலூர், செப்.14- கடலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் தே.ஜனார்த்தனன் (76). அதிமுகவில் ஒருங்கிணைந்த கடலூர்-விழுப்புரம் மாவட்டச் செயலாளராக 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர். இவர் 1991 முதல் 96 வரையில் ஜெயலலிதா அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை(செப்.13) உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் கள் எம்.சி. சம்பத், எம்.சி. தாமோத ரன், சி.வி.சண்முகம், அதிமுக அவைத்  தலைவர் தமிழ் மகன் உசேன், சட்ட மன்ற உறுப்பினர்கள் அருள்மொழி தேவன், கே.எ.பாண்டியன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றங்கரையில் புதனன்று(செப்.14) அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்ச ருக்கு சரஸ்வதியம்மாள் என்ற மனை வியும், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர் ஜெ.கோபாலகிருஷ்ணன், வழக்குரைஞர் ஜெ.புருஷோத்தமன் என்ற மகன்களும் உள்ளனர்.

நான்கு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை,செப்.14- தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.15 அன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.16, 17ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.18ஆம் தேதி ஒருசில இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஒகேனக்கல் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த முடிவு

தருமபுரி, செப்.14- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம், ஊட்ட மலை ஆரம்ப சுகாதார நிலையங்க ளில்  தமிழக மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதனன்று (செப்.14) ஆய்வு செய்தார். பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம், ஊட்ட மலை ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் அளிக்கப்படும் சேவைகள், உள்  கட்டமைப்புகள் குறித்தும் ஆய்வு  மேற்கொண்டார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர், “ பெரிய சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல்  இருப்பதால் இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மினி ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்” என்றார்.

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு:  முதல் சுற்றில் 11,595 பேருக்கு ஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பு வதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு  ஆகஸ்ட் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள்  ஒதுக்கப்பட்டன. அதன்பின் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்சுற்றில் பங்கேற்க தரவரிசையில் 1 முதல் 14,524 வரையுள்ள  மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 12,294 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மினி பேருந்து பள்ளத்தில்  கவிழ்ந்து 11 பேர் பலி

ஸ்ரீநகர்,செப்.14-  ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து  11 பேர் பலியாகினர்.  பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் என்ற  பகுதிக்கு புதனன்று காலை பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணித்தனர். சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா  என்ற இடத்தில்  பேருந்து சென்று  கொண்டிருந்த போது திடீரென  கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து  சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்‍கு, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.








 


 

 

;