கேரள மாநிலம் ஆழப்புழை மாவட்டம் வள்ளிக்குன்னம் எனும் ஊரில் தோப்பில் பாசி 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் நாள்பிறந்தார். அவரது இயற்பெயர் தோப்பில் பாஸ்கர பிள்ளை. அவர் ஒரு மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். இவர் இயக்கிய ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்டாக்கி’ என்ற நாடகம் குறிப்பிடத்தகுந்தது. முடியானய புத்ரன், புதிய ஆகாசம், புதிய பூமி போன்ற நாடகங்கள் விருதுகள் பெற்றுத்தந்தன. 1969ல் மூலதனம் - படத்துக்கான சிறந்த கதைக்காக கேரள மாநிலதிரைப்படவிருது கிடைத்தது. 1971ல் சரசய்யா - படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. கேரள சாகித்ய அகாடமி விருது, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, பேரா.என்.கிருஷ்ணபிள்ளை விருது, சோவியத் நாடு நேரு விருது ஆகியவை இவர் பெற்ற விருதுகள்.மாணவப்பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ்காரராக இருந்து கம்யூனிஸ்ட் ஆனார். கேரள சட்டமன்றத்திற்கு 1954 ஆம் ஆண்டு பரணிக்காவு தொகுதியிலிருந்தும் 1957 ஆம் ஆண்டு பத்தனம் திட்டை தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றியவர். அதன் பின்னர் கலை இலக்கியத்துறையிலும் நாடகத் துறையிலும் திரைத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்டார். 1960, 70களில் 16 நாடகங்களை எழுதினார். 100க்கு மேற்பட்டதிரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார். 16 திரைப்படங்களை இயக்கினார். ஜனயுகம் - பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். பல்வேறு பதிப்பகங்களிலும் அவரது சிறுகதைகள் வெளியாயின. இவர் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் மரணமடைந்தார்.
===-பெரணமல்லூர் சேகரன்==