கொல்லம், அக்.13 - பாம்பை கடிக்க வைத்து மனைவி உத்ராவை கொலை செய்த கணவர் சூரஜ் எஸ் குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொல்லம் ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.மனோஜ் இந்த தண்ட னையை வழங்கினார். சூரஜுக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு “மிகவும் அரிதானது” என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வயது மற்றும் குற்றப் பின்னணி இல்லாத காரணத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஷம் வைத்து கொன்றதற்காக சூரஜ்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆதாரங்களை அழித்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இது ஒரு அரிய வழக்கு என்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கூறியது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை நிர்ணயித்த ஐந்து குற்றங்களில் நான்கை சூரஜ் செய்ததாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. அறிவியல் சான்றுகளும் ஆதாரங்கள் அடிப்படையிலான வலுவான வாதங்களும் உத்ரா வழக்குக்கு வலுசேர்த்தது. கொல்லம் ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் திங்களன்று சூரஜை குற்றவாளியாக அறிவித்தது. கொலை (பிரிவு 302), கொலை முயற்சி (307), விஷம் (328) மற்றும் ஆதாரங்களை அழித்தல் (201) ஆகிய குற்றங்களை சூரஜ் செய்திருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஏரம் வெள்ளச்சேரியைச் சேர்ந்த விஜயசேனன்- மணிமேகலாவின் மகள் உத்ரா, 2020 மே 7 காலை பாம்பு கடித்து இறந்து கிடந்தார். சூரஜின் அனைத்து நடவடிக்கைகளும் அவரது மனைவியைக் கொன்று சொத்து மற்றும் தங்கத்தை கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டி ருந்தன. இவர்களது திருமணம் 2018 மார்ச் 25 அன்று நடைபெற்றது.