பத்தனம்திட்டா:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட காங்கிரஸ்கட்சி பொதுச் செயலாளரும், மகிளா காங்கிரஸ் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான சுதா குருப் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் புறக்கணிப்பும் உளவியல் துன்புறுத்தல்களும் தன்னை ராஜினாமாவுக்கு தூண்டியதாக சுதா குருப் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்கட்சியின் வீழ்ச்சி அதிர்ச்சியளிப்பதாகவும், கட்சி இரண்டுஅல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாபியாவாக சீரழிந்துவிட்டதாகவும் அவர்குற்றம் சாட்டினார்.உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து பல்லிக்கல் பிரிவில் யுடிஎப் வேட்பாளராக சுதா போட்டியிட்டார். அப்போது நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு பெண் வேட்பாளர்களுக்கு ஒரு நிமிடம் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், பெண் ஊழியர்கள் கடுமையான புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தலைகாட்டவில்லை. வாக்காளர்களை நேரில்சந்தித்தபோது, எல்டிஎப் அரசாங்கத்தின் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் நன்மைகள் பற்றி ஒவ்வொன்றாக அவர்கள் எடுத்துப் பேசுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். கோவிட் காலத்தில், பசியைப் போக்க உணவுபொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் சமூக- நல ஓய்வூதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. பொதுக் கல்வியின் பாதுகாப்பையும் லைப் திட்டத்தையும் மக்கள்எடுத்துக் கூறினார்கள் என்றும் சுதா குருப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.