states

img

கேரள நகராட்சிகளிலும் எல்டிஎப் முன்னிலை.... எல்டிஎப்- 42, யுடிஎப்- 36, என்டிஏ- 2 மற்றவர்கள் 6.... தேர்தல் ஆணையம் புள்ளி விவரங்களை சரி செய்தது....

கொச்சி:
கேரள உள்ளாட்சி தேர்தல்களில் நகராட்சிகளின் எண்ணிக்கையிலும் இடது முன்னணியே முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் ‘டிரெண்ட்’ மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக யுடிஎப் முன்னிலைபெற்றதாக வலைத்தள பதிவுகள் காட்டின. அது சரிசெய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 86 நகராட்சிகளில் 42 எல்டிஎப் கட்டுப்பாட்டில் உள்ளன. யுடிஎப் 36 இடங்களிலும், என்டிஏ இரண்டிலும் பெரும்பான்மை பெற்றுள்ளன. ஆறு நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. அதன்படி பரவூர், பத்தனம்திட்டா, திருவல்லா, மாவேலிக்கரா, களமசேரி, கோட்டயம் நகராட்சிகளில், எந்தவொரு முன்னணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.முன்னதாக, தேர்தல் ஆணையம் கட்சி தரவரிசைகளை யுடிஎப்-க்கு 45, எல்டிஎப்-க்கு 35, என்டிஏ-க்கு 2 மற்றும் பெரும்பான்மை இல்லாதது 4 என்ற தரவரிசைகளை வெளியிட்டது. ‘டிரெண்ட்’  மென்பொருளானது எல்டிஎப் நிறுத்திய சுயேச்சை வெற்றியாளர்களை மற்றவர்கள் பிரிவிலும்,  யுடிஎப் பட்டியலிலும் உள்ளடக்கியது. களமசேரி, பரவூர், மாவேலிக்கரா, பத்தனம்திட்டா நகராட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முந்தைய பதிவில் யுடிஎப் பெரும்பான்மை பெற்றதாக உள்ளது. எல்டிஎப் வென்ற பஞ்சாயத்துகளையும் நகராட்சிகளையும் யுடிஎப் வென்றதாக கணக்கிட்டது. பெரும்பாலான நகராட்சிகளில் யுடிஎப் வென்றதாக இப்படித்தான் தகவல் வெளியானது. புகார்களின்படி தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்து பிழைகளை சரிசெய்துள்ளது.

கிராம பஞ்சாயத்து முடிவுகளிலும் மாற்றம்
டிரெண்ட் மென்பொருள் சரி செய்யப்பட்டபின் கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கையிலும் இதே போன்ற வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எல்டிஎப் பெரும்பான்மையைக் கொண்ட காஞ்சிரம்குளம், போருவழி ஆகிய பஞ்சாயத்துகளும் முன்னணிகளுக்கு பெரும்பான்மை இல்லாத அதியன்னூர், பெரிங்கமலா, விளுவூர்கல், ஆரியங்காவு, மந்ரோதுருத்து, ஓச்சிரா பஞ்சாயத்துகள் யுடிஎப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. டிரெண்ட் புள்ளிவிவரங்களின்படி, தற்போது மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் எல்டிஎப் 551, யுடிஎப் 315, பாஜக 10  பஞ்சாயத்துகளில் பெரும்பான்மை பெற்றதாகவும் 65 பஞ்சாயத்துகளில் மற்றவர்கள் அல்லதுயாருக்கும் பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;