திருவனந்தபுரம்:
கேரளத்தில் நடந்த 92 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் தேர்தலில் 48 இடங்களை எல்டிஎப் வென்றுள்ளது.
86 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகளின் தலைவர் பதவிக்கான தேர்தல்கள் திங்களன்று நடைபெற்றது. இவற்றில் எல்டிஎப் வேட்பாளர்கள் 43 நகராட்சிகள், 5மாநகராட்சிகளில் வெற்றி பெற்றனர். யுடிஎப் 41 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியின் தலைவர் பதவியை வென்றுள்ளது. பாஜக பாலக்காடு, பந்தளம் என 2 நகராட்சிகளை வென்றது.யாருக்கும் பெரும்பான்மை இல்லாத பரவூர்,கோட்டயம், கலமசேரி ஆகிய மூன்று நகராட்சிகளில் யுடிஎப் வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றனர். கலமசேரியில் உள்ள ஒரு வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் கிடைக்கும் வெற்றி நகராட்சியின் தலைவரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எல்டிஎப் தலைமையில் உள்ள மட்டன்னூர் நகராட்சிக்கான தேர்தல் 2022 இல் நடைபெறும் .
திருவனந்தபுரத்தில், மாநகராட்சியையும், நெடுமங்காடு, நெய்யாற்றிங்கரா, வர்க்கலா, ஆட்டிங்கல் ஆகிய 4 நகராட்சிகளையும் எல்டிஎப்வென்றது. யுடிஎப்பும், பாஜகவும் எங்கும் வெற்றிபெற முடியவில்லை. கொல்லத்தில், மாநகராட்சியையும், கருநாகப்பள்ளி, கொட்டாரக்கரா, புனலூர் ஆகிய 3 நகராட்சிகளையும் எல்டிஎப் கைப்பற்றியது. பரவூர் நகராட்சியை மட்டுமே யுடிஎப் வைன்றது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் அடூர், பத்தனம்திட்டா ஆகிய இரண்டில் எல்டிஎப் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். யுடிஎப் திருவல்லா நகராட்சியையும், பாஜக பந்தளம் நகராட்சியையும் கைப்பற்றின.ஆலப்புழாவில் உள்ள ஆறு நகராட்சிகளில் ஆலப்புழா, சேர்த்தலா, காயம்குளம் ஆகியமூன்றில் எல்டிஎப் வெற்றி பெற்றது. செங்ஙன்னூர், ஹரிப்பாடு, மாவேலிக்கரா ஆகிய 3 நகராட்சிகளில் யுடிஎப் வெற்றி பெற்றது. கோட்டயத்தில், பாலா நகராட்சியில் மட்டும் எல்டிஎப் வென்றது. சங்கநாசேரி, ஏற்றுமானூர், கோட்டயம், வைக்கம், ஈராற்றுப்பேட்டா ஆகிய 5 நகராட்சிகளில் யுடிஎப் வெற்றி பெற்றது. சமபலத்தில் இருந்த கோட்டயம் நகராட்சியை குலுக்கல் முறையில் யுடிஎப் வென்றது. இடுக்கியில், தொடுபுழா நகராட்சியை எல்டிஎப்பும், கட்டப்பனா நகராட்சியை யுடிஎப்பும் கைப்பற்றின.
எர்ணாகுளத்தில், எல்டிஎப் மேயர் பதவி உட்பட ஆறு இடங்களை வென்றது. கொச்சி மாநகராட்சியையும், ஏலூர், திரிப்புனித்துறா, கூத்தாட்டுக்குளம், கோதமங்கலம், பிரவம் என 6 நகராட்சிகளையும் எல்டிஎப் கைப்பற்றியது. பரவூர், ஆலுவா, அங்கமாலி, த்ரிக்காகரா, முவாற்றுப்புழா, பெருமும்பாவூர், கலமசேரி, மராடு என 8 நகராட்சிகளை யுடிஎப் கைப்பற்றியது. கலமசேரியை குலுக்கல் முறையில் யுடிஎப்வென்றது. திருச்சூர் மாவட்டத்தில், திருச்சூர்மாநகராட்சி, சாவக்காடு, குருவாயூர், கொடுங்ஙல்லூர், குன்னம்குளம், வடக்காஞ்சேரி என 5 நகராட்சிகளையும் எல்டிஎப் கைப்பற்றியது. சாலக்குடி, இரிஞ்ஞாலக்குடா ஆகிய 2 நகராட்சிகளை யுடிஎப் கைப்பற்றியது.
பாலக்காட்டில் ஒற்றப்பாலம், ஷொர்னூர், செர்புளச்சேரி, பட்டாம்பி, சிற்றூர் தத்தமங்கலம் ஆகிய 5 இடங்களில் எல்டிஎப் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மன்னார்காடில் யுடிஎப்பும், பாலக்காடு நகராட்சியில் பாஜகவும் வெற்றிபெற்றது. மலப்புறத்தில் எல்டிஎப் பெரிந்தல்மன்னா, பொன்னானி, நிலம்பூர் ஆகிய 3 நகராட்சிகளில் வெற்றிபெற்றது. மலப்புறம்,கொண்டொட்டி, கோட்டயம், மஞ்சேரி, பரப்பநங்காடி, தானூர், திரூர், திரூரங்கடி, வலஞ்சேரிஆகிய ஒன்பது இடங்களை யுடிஎப்வென்றது. கோழிக்கோடு மாநகராட்சி, முக்கம், கொய்லாண்டி, வடகரா ஆகிய 4 இடங்களில் எல்டிஎப் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பரோக், கொடுவள்ளி, பயோளி, ராமநாட்டுக்கரா ஆகிய 4 இடங்களில் யுடிஎப் வென்றது.
வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரி நகராட்சியை எல்டிஎப் வென்றது. கல்பற்றா, மானந்தவாடி ஆகிய நகராட்சிகளை யுடிஎப் கைப்பற்றியது. கண்ணூரில், ஆந்தூர், இரிட்டி, கூத்துப்பறம்பு, தலசேரி, பையனூர் ஆகிய ஐந்து இடங்களை எல்டிஎப் வென்றது. கண்ணூர் மாநகராட்சி, பானூர், ஸ்ரீகாந்தபுரம், தளிப்பரம்பு ஆகிய 4 இடங்களை யுடிஎப் வென்றது. மட்டன்னூர் நகராட்சியில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நகராட்சி தற்போது எல்டிஎப் தலைமையில் உள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் காஞ்ஞங்ஙாடு, நீலேஸ்வரம் நகராட்சிகளை எல்டிஎப் கைப்பற்றியது. காசர்கோடு நகராட்சியில் யுடிஎப் வெற்றி பெற்றது.