திருவனந்தபுரம்:
வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தும் அமைச்சரவையின் பரிந்துரையை திருப்பி அனுப்பி நிராகரித்த ஆளுநரின் முடிவு குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், சட்டப்பேரவை கூடவேண்டிய அவசரம் இல்லை என்ற வாதம் தவறானது என்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில்உள்ள விவசாயிகளின் கிளர்ச்சி கடந்த சிலநாட்களில் மேலும் வளர்ந்துள்ளது. ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், உணவுக்காக மற்ற மாநிலங்களை நம்பியுள்ள கேரளம், விவசாய சமூகம் மற்றும் விவசாயத் துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார்.
ஆளுநரின் நடவடிக்கை அரசி யலமைப்பின் பிரிவு 174 (1) க்கு முரணானது. கூட்டத்தை கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோஆளுநருக்கு அதிகாரம் இல்லை. பெரும்பான் மை உள்ள அரசாங்கம் சட்டப்பேரவையை கூட்டவோ, கூட்டத்தை முடித்துக்கொள்ளவோ பரிந்துரைத்தால் அதை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டவர் என சர்க்காரியா கமிஷன் (மத்திய மாநிலஉறவுகள் குறித்து பரிந்துரைத்த ஆணையம்) கூறியுள்ளது. சட்டப் பேரவையை கூட்ட வேண்டும் என்று அமைச்சரவை பரிந்துரைத் தால், அதை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதுவே விதிமுறை. குடியரசு தலைவரும் ஆளுநரும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுவார்கள். பஞ்சாப் மாநிலத்திற்கும் ஷம்சிர் சிங் (1975) க்கும் இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை தெளிவுபடுத்தியுள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வேளாண் அமைச்சர்
சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான அவசர தீர்மானத்தை முதல்வர் முன்வைக்கவும், ஒரு மணி நேரம் நடத்தவும் திட்டமிட்டிருந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், பிற கட்சித் தலைவர்களும் பேச முடிவுசெய்யப்பட்டிருந்தது. ஆளுநரின் நடவடிக்கை அசாதாரணமானது என்றும் அதை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் தெரிவித்தார்.
கைப்பாவையாக வேண்டாம்: சிபிஐ
மத்திய அரசின் மக்கள் விரோத விவசாயிகள் சட்டங்கள் குறித்து விவாதிக்க சட்டப் பேரவையை கூட்ட அனுமதி மறுத்து ஆளுநர் எடுத்த நடவடிக்கையை சிபிஐ மாநில செயலாளர் கானம்ராஜேந்திரன் கண்டித்துள்ளார். ஆளுநர் மத்தியஅரசின் கைப்பாவையாக இருக்கக்கூடாது என்றும் கானம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமானது: சென்னித்தலா
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்தது துரதிர்ஷ்டவச மானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்தார். நாட்டின் விவசாய சமூகத்தை மோசமாக பாதிக்கும் சட்டத்திற்குஎதிராக கேரளாவின் குரல் சட்டப்பேரவையில் எழுப்பப்பட வேண்டும். உடனடி முக்கியத்துவம் இல்லாதது என்றுகூறி அனுமதி மறுத்த ஆளுநரின் முடிவு ஜனநாயக விரோதமானது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எல்ஏ- க்கள் சட்டப்பேரவை கூட்ட அரங்கத்திற்கு வெளியே கூடி, மத்திய சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னித்தலா கோரினார்.ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியபோது ஆரிப் முகமது கான் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தார். உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் பகிரங்கமாக நிராகரித்தார்.புதிய விவசாய சட்டங்களைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பது குறித்து அரசாங்கம் சட்ட ஆலோசனையைப் பெற்றது. மாநிலத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவுசெய்யப்பட்டது. வேளாண் சட்டங்களின் சட்டப்பூர்வமான தன்மையை ஆராய அதிகாரப்பூர்வ துணைக்குழுவையும் அரசாங்கம் நிய மித்துள்ளது. உச்சநீதிமன்றத்தை அணுகும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.