திருவனந்தபுரம், ஆக. 4- வயநாடு பேரிடரில் சிக்கியவர் களின் மறுவாழ்வுக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார்.
தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பேரிடரில் பெரிய பகுதி அழிந்தால் தனி நகர்மன்றம் அமைக்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரை யும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சி மேற் கொள்ளப்பட்டது. பேரழிவில் சிக்கி யோர் இன்னும் 206 பேர் கண்டு பிடிக்கப்படவில்லை. 215 இறப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப் பட்டு உள்ளன. இவர்களில் 98 ஆண்கள், 87 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் உள்ளனர். இது வரை 143 உடல் உறுப்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 212 உடல்கள் மற்றும் 140 உடல் உறுப்புகளின் உடற்கூராய்வுகள் நிறைவடைந்துள்ள தாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
148 சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதுடன் 119 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் தெரியாத 67 உடல்களும், 87 உடல் உறுப்புகளும் உள்ளன. இவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டன.
பேரிடர் பகுதியில் இருந்து 504 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 81 பேர் தற்போது வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 205 பேர் மருத்துவமனைகளில் இருந்து திரும்பியுள்ளனர்.
நிலச்சரிவு துயரத்தை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட பத்து முகாம்களில் 1707 பேர் தங்கியுள்ளனர் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
நிவாரண நிதிக்கு சிபிஎம் எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியம்
கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில எம்எல்ஏக்கள் தங் களின் ஒரு ஊதியத்தை வழங்கிய நிலையில், தற்போது கே. ராதா கிருஷ்ணன், பிகாஷ் ரஞ்சன் பட்டாச் சார்யா, ஜான் பிரிட்டாஸ், அம்ரா ராம், வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம், சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் ஆகிய 8 எம்.பி.க்களும் தங்களின் ஒரு மாத (தலா ரூ. 1 லட்சம் விகிதம் மொத்தம் ரூ. 8 லட்சம்) ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதுதவிர, எம்.பி.க்களின் உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து வழி காட்டுதலின்படி புனரமைப்பு திட்டங் களுக்கு உதவி வழங்கப்படும் என்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.