states

img

வயநாட்டில் மரணம் சூழ்ந்த நள்ளிரவு

வயநாடு, ஜூலை 30- கேரளத்தின், வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி, சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் திங்களன்று நள்ளிரவில் பெய்த - அதி  கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுவரை 107 பேர் உயிரி ழந்துள்ளது தெரியவந்துள்ள நிலை யில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண் ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜய னின் உத்தரவின் பேரில், 5 அமைச்சர் களின்குழு வயநாட்டில் முகாமிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ரெட் அலர்ட் அறிவிப்பும் கொட்டித் தீர்த்த கனமழையும்

கேரளம் முழுவதும் கடந்த இரண்டு  மாதங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சாலியாற்றில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு பகுதிகளில் லேசான நிலச்சரி வும் ஏற்பட்டது.

இதில், ஜூலை 29 திங்களன்று அதி காலை சாலியாற்றை ஒட்டி மேப்பாடி,  சூரல்மலை ஆகிய மலைப்பகுதி களில் பெருமளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆற்றுவெள்ளம் மக்கள் வசிக்கும் பகுதிகளை சூழந்து கொண்டது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வீடு களின் இடிபாடுகளில் சிக்கியும், வெள்ள த்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் கரைந்த சாலைகள், பாலங்கள்

முண்டக்கையில் சாலியாற்றின் குறுக்கே இருந்த பாலம் இருந்த இடம் தெரியாமல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலையும் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் வீடுகளின் மாடிகளிலும், அடுக்கு மாடி கட்டடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த இடங்களில் மின் இணைப்புகள் முற்றிலும் சேதமடைந்தது. 

ஹாரிசன் மலையாளம் போன்ற பெரிய தேயிலைத் தோட்டங்கள் இருந்த பகுதி தரிசு நிலம் போல் மாறிவி்ட்டன. நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் எவ்வித தொடர்பும் இல்லாத வகையில் துண்டிக்கப்பட்டு உள்ளனர்.

சூரல்மலை

வயநாட்டின் சூரல்மலையில் மட்டும் மூன்று முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 24 பேரின் உடல்கள் சாலியாற்று பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் இருந்த உடல்கள் நீலாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன.

மேப்பாடி

மேப்பாடி மலைப்பகுதியில் உயிரி ழந்தவர்களில் 46 பேரின் உடல்கள் மேப்பாடியில் உள்ள மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 38 பேரின் உடல்கள் மேப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் 28 பேர் அடை யாளம் காணப்பட்டனர். எட்டு பேரின் உடல்கள் விம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவர் பளில், எட்டு பேரில் மூன்று பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

முண்டகையில்

முண்டகையில் ஏற்பட்ட நிலச்சரி வில் 250 பேர் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முண்டகையில் பகுதியில், மோசமான வானிலை காரணமாக அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முண்ட கையில் ஆற்றில் மீண்டும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சூரல்மலையில் மேலும் ஒரு மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மீட்புப்  பணி கடினமாகியுள்ளது. அப்பகுதி யிலிருந்து மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

நீடிக்கும் மோசமான வானிலை

முண்டகையில் பாலம் இடிந்து விழுந்ததால் மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினர் அங்கு தற்காலிகப் பாலம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆற்றின் வெள்ளப் பெருக்கு காரணமாக அதற்கும் இடையூறு ஏற்பட்டது. சூலூரில் இருந்து வந்த ஹெலிகாப்டர் மூலம் ஏர் லிஃப்டிங் செய்வதற்கும் காற்றும் மழையும் தடையாக உள்ளது.

ரிசார்ட்டில் 300 பேர் மீட்பு

இந்நிலையில் ஒரு ரிசார்ட்டில் சுமார் 300 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. நூறுபேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற வர்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனிடையே தன்னார்வலர்கள் ஏராளமானோர் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

முடுக்கி விடப்பட்ட அரசின் அனைத்து துறைகள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக, பேரிடர் பாதித்த பகுதியில் ஏற்கனவே ஒரு குழு முகாமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், கேரள  தீயணைப்புப் படை, காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, இராணு வம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் என அனைத்துத்துறைகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.  தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் மூன்று குழுக்களும் வயநாடு வரவுள்ளன. 

கேரளம் தவிர தமிழ்நாட்டின் அரக்கோணம் மற்றும் கர்நாடகத்தின் பெங்களூருவில் இருந்து இரண்டு குழுக்கள் வயநாடு விரைகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முப்பது பேர்  இருப்பார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டிரோன்கள் - நாய்கள்

தேடுதல் பணியில் உதவ பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆளில்லா விமானக் (டிரோன்) குழுக்கள் வயநாடுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மண்ணில் இறந்து புதையுண்டு கிடப்ப வர்களைக் கண்டுபிடிக்க இதற்கென  சிறப்புப் பயிற்சி பெற்ற இரண்டு  போலீஸ் நாய்களும் பயன்படுத்தப்படு கின்றன. 

இறந்தவர்களை கண்டறிய பயிற்சி பெற்ற இராணுவ நாய்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

நிலச்சரிவில் இடிந்த வீடுகள் மற்றும்  குப்பைகளை அகற்ற நவீன இயந்தி ரங்களுடன் பெங்களூரிலிருந்து இராணுவப் பிரிவு ஒன்று வர வழைக்கப்பட்டு உள்ளது.

உடற்கூராய்வை துரிதப்படுத்த வயநாட்டில் உள்ள தடயவியல் குழுவைத் தவிர, கோழிக்கோடு மருத்துவமனை தடயவியல் மருத்து வர்கள் அடங்கிய சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காண முடியாத உடல்களை அடை யாளம் காண மரபணு சோதனைகள் செய்யப்படுகின்றன.

கட்டுப்பாட்டு அறை

வயநாட்டில் மாவட்ட அளவிலான ஊடகக் கட்டுப்பாட்டு அறையும், திருவனந்தபுரத்தில் உள்ள பிஆர்டி இயக்குநரகத்தின் செய்திக் குறிப்புப் பிரிவில் மாநில அளவிலான ஊடகக் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே அடுத்த ஐந்து நாட்களுக்கு வயநாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி, வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வயநாட்டின் துயர் துடைக்க  அனைவரும் ஒன்றுபடுவோம்!

கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட  நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான துயரம் கேரளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று மாலை (ஜூலை 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:   

ஒரு பிரதேசம் முழுவதும் பெரும் துயரத்தில் சிக்கியுள்ளது. இதுவரை (மாலை 5 மணி நிலவரப்படி)  93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். பலர் நீரில் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். நமது நாடு எதிர்கொண்ட மிகக் கொடூர மாக இயற்கை பேரிடரில் ஒன்று இப்போது ஏற்பட்டுள்ளது.  

மீட்பு நடவடிக்கைகளில் 320 தீயணைப்பு வீரர்கள்,  என்டிஆர்எப்-இன் 60 வீரர்கள், டிஎஸ்சியின் 64 பேர் கொண்ட குழு வயநாடு வந்துள்ளது. பெங்களூரு வில் இருந்தும் விமானப்படை வீரர்கள்வர உள்ளனர். சூலூரில் இருந்து வந்த 2 ஹெலிகாப்டர்கள் கால நிலை கருதி கோழிக்கோட்டில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. மழை குறைந்த பின், பணியை மேற்கொள்ள கோரப்பட்டுள்ளது. மீட்புப் பணி களுக்கு தலைமை வகிக்க வடபகுதி ஐ.ஜி, டிஐஜி ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுள்ள னர். தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப் பட்டுள்ளன. மருத்துவக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ்கள், மலைப்பகுதிகளில் இயங்கும்.

துயரச் செய்தி அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் உள்ளிட்டோர் தொடர்புகொண்டு பேசி னர். கேரள எதிர்க் கட்சி  தலைவர் உள்ளிட்டோர் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தனர். 5 அமைச்சர்களின் நேரடி மேற்பார்வையில் ராணுவம் உட்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நம்மால் இயன்ற மீட்பு நடவடிக்கைகள் நடந்துகொண்டி ருக்கின்றன. அனைத்து படைகளும் இதில் சிறப்பான உதவிகளை செய்து வருகின்றன.

நிலச்சரிவுக்கு வாய்ப்பில்லாத  பகுதி தான் சூரல்மலை

இப்போது பாதிக்கப்பட்ட பகுதி நிலச்சரிவு ஏற்பட்ட  வாய்ப்புள்ளதாக அறிப்பட்டது அல்ல. பாதிப்பின் மையப்பகுதியான முண்டகை தீவிர பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கிருந்து பாய்ந்து வந்த வெள்ள மும் மண்ணும் பாறைகளும் நிலச்சரிவுக்கு வாய்ப்பில்லாத சூரல்மலை அங்காடி என்கிற பகுதியை வந்தடைந்துள்ளது. இந்த பகுதி சமதள மான ஆற்றுப்படுகையும், அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதியுமாகும். இது சம்பவ இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், நிலச் சரிவு ஏற்பட்ட பகுதி மக்கள் வசிக்கும்  பகுதி அல்ல. மழை அதிகரித்ததால் மக்கள் வெளியேற்றப் பட்டிருந்தனர். இது துயரத்தின் அளவை குறைத்துள் ளது. இப்பகுதியில் 3069 நபர்கள் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழு வதும் 118 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 5204 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.  

கணிப்பைத் தாண்டி 2 மடங்கு கனமழை

இங்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. 64 முதல் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்பதுதான் திங்களன்று மதியம் வெளியான முன்னறிவிப்பு. ஆனால் முதல் 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டரும், அடுத்த 24 மணி நேரத்தில் 372 மில்லி மீட்டர் மழையும், இந்த பகுதியில் பெய்துள்ளது. 48 மணி நேரத்தில் 572 மி.மீட்டர் மழை  பெய்துள்ளது. வயநாட்டில் இப்போது துயரம் அனு பவிக்கும் மக்களை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் . 

மாநில அரசு 2 நாட்கள் துக்கம்

வயநாடு நிலச்சரிவில் பலியான மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், உடைமைகள், சொத்துக்களை இழந்து தவிப்பவர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ள கேரள அரசு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாநில அளவில் துக்கம் அறிவித்தது. தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிட்டதுடன், அரசு நடத்தும் பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்தது.

தமிழ்நாடு அரசு 
ரூ. 5 கோடி நிதியுதவி  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை தளப்பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்து உதவி களையும் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு

மேலும், நிலச்சரிவால் பாதிப்புக்கு உள்ளான கேரளத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழுவையும் கேரளத்திற்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.