states

உள்ளாட்சி முதல் முதல்வர் வரை இடம்பெறும் போதைப்பொருள் தடுப்பு குழுக்கள்

திருவனந்தபுரம், செப்.14- கேரளத்தில் போதைப்பொருள் நுகர்வு மற்றும் விநியோகத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை களுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இவை மாநிலம், மாவட்டம், உள்ளாட்சி மற்றும் பள்ளி  மட்டங்களில் செயல்பட உள்ளன. முதல்வர் பினராயி விஜயன் தலை மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பரவலைத் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மேலும் கூடுதல் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. மாநில அளவிலான குழு வுக்கு முதல்வர் தலைமை தாங்கு வார். உள்ளாட்சித் துறை அமைச்சர்  இணைத் தலைவர், நிதி, பொதுக் கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், தொழில்கள், சட்டம், மீன்வளம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி யினர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் செய லாளர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.  தலைமைச் செயலாளர் ஒருங்கிணைப் பார். மாநில அளவிலான குழு 22ஆம் தேதி கூடுகிறது. மாவட்ட அள விலான குழுக்களில், மாவட்ட பஞ்சா யத்து தலைவர் தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பாள ராகவும் இருப்பர். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் குழு வரும் 21ஆம்  தேதி கூடுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உள்ளூர் அளவிலான குழுவின் தலைவர்களாக இருப்பார் கள். காவல் மற்றும் கலால் அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் கல்வி  நிறுவனங்களின் தலைவர்கள், அர சியல் கட்சிப் பிரதிநிதிகள், குடும்பஸ்ரீ, நூல் நிலையம், கிளப் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், சமூக மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களும் பங்கேற்கின்றனர்.  சுவரொட்டி மற்றும் பலகை மூலம் விளம்பரம் செய்ய வியாபாரி கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் உதவி கேட்கப்படும். வார்டு அளவி லான குழுவின் தலைவராக வார்டு  உறுப்பினர் இருப்பார். பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கன்வீனராக நியமிக்கப்படுவார். ஆசிரியர் - பெற்றோர் குழு தலைமை யில் பள்ளி அளவில் சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். 28 ஆம் தேதிக்குள் ஊராட்சி, வார்டு மற்றும் பள்ளி அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என முதல்வர் பரிந்துரைத்தார். அக்டோபர் 2ஆம் தேதி மாபெரும் பிரச்சாரம் தொடங்கும். நவம்பர் 1ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் போதைப்பொருள் தடுப்புச் சங்கிலி உருவாக்கப்படும். அடையாளமாக போதைப் பொருட்கள் எரிக்கப்படும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், நூலகம் மற்றும் கிளப் ஆகிய இடங்களில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படும். கூட்டத்தில் எம்.பி.ராஜேஷ், ஆர்.பிந்து உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செய லாளர் டாக்டர். வி.பி.ஜாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.