புவனேஷ்வர்:
ஓய்வுபெற்று 22 ஆண்டுகள் கழிந்தபின்பும்ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாத தற்காக, அடுத்து ஒரு வார காலத்திற்குள்அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படா விட்டால், ஒடிசா நிதித்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் சம்பளங்களைப் பிடித்தம் செய்திட வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.மிதுரம் பாய் (வயது 80), ஹிராகுட் அணைத் திட்டத்தில் வேலை செய்து, 1998 ஜூன் 30 அன்று ஓய்வு பெற்றார். அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததால், அவர் மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தை அணுகினார். தீர்ப்பாயம் அவருடைய பணிகளை 2015இல் முறைப்படுத்தி, அவருக்கு அடிப்படைக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்குஎதிராக நீர்ப்பாசனத் துறை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், ஒடிசா உயர்நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவு செல்லும் என்று உறுதிப்படுத்தி, மிதுரம் பாய் அவர்களின் பணிகளைமுறைப்படுத்தி, அவருக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் மற்றும் ஓய்வூதியப் பலன்களை அளித்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
எனினும், உயர்நீதிமன்றத்தின் ஆணையை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மிதுரம் பாய் தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாண்டா மற்றும் பணிக்கிரஹி ஆகியோர்அடங்கிய அமர்வாயம், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிது ஓராண்டு ஆகியும்,அதனை நிறைவேற்ற அரசாங்கம் முன்வராததால், இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அடுத்த ஒரு வார காலத்திற்குள் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படா விட்டால், நிதித்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் ஊதியத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.(ந.நி.)