சாதி, மதம் ஒரு பிரச்சனையே கிடையாது., ஒருவர்க்கொருவர் காதலிப்பது குற்றமாகாது என்று தன் கணவரைக் கைது செய்ததை ஆட்சேபித்து, பிங்கி என்னும் இளம்பெண் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டவிரோத மதமாற்ற அவசரச் சட்டத்தின்கீழ் ரஷீத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பிங்கி என்னும் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்ததாக இவர்மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மணமகள் பிங்கியை அரசின் காப்பகத்திலும், மருத்துவமனையிலும் ஒருவாரத்திற்கும் மேலாக வைத்திருந்துவிட்டு, இப்போது மணமகனின் வீட்டிற்கு அனுப்பியிருக்கின்றனர். இவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக இவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.
தனக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள் தொடர்பாக பிங்கி, செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். இது குற்றம் கிடையாது என்றார்.
பிங்கியும், ரஷீத்தும் திருமணம் செய்துகொள்வதற்காக திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்தபோது, அங்கே காவல்துறையினரால் ரஷீத் கைது செய்யப்பட்டார்.
(ந.நி.)