states

நிவர் புயல் முன்னெச்சரிக்கை... புதுச்சேரியில் 3 நாள் ஊரடங்கு....

புதுச்சேரி:
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவித்துள்ளார்.பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. நிவர் புயல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்து வருகிறது.இதனிடையே புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.அதேசமயம் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இன்று விடுமுறை
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் புதன்கிழமை (நவ. 25) அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.