ஆந்திராவில் வங்கி ஊழியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கொரோனா விடுமுறைக்கு பின் தர்மபுரம் பகுதியில் உள்ள வங்கியில் தற்காலிக பணியில் சேர்ந்துள்ளார். அப்போது ராஜேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அப்பெண் வேலை முடித்து வீடு திரும்பாததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை கண்டுகொள்ள வில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் பெண் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திஷா சட்டத்தின்படி மொபைல் செயலி மூலம் புகார் அளித்தும் காவல்துறை அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை காணாமல் போன பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தர்மபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில் அந்த உடல் காணாமல் போன வங்கி பெண் ஊழியரின் உடல் என்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் என்ற இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.