science

img

காளானில் புற்றுநோயை அழிக்கும் பண்புகள் - காப்புரிமையை பெற்ற சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்!

தமிழக காடுகளில் வளரக்கூடிய காளான்களில், புற்றுநோயை அழிக்கக்கூடிய பண்புகள் உள்ளது என்பதை சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் வெங்கடேசன் கவியரசன், கடந்த 30 ஆண்டுகளாக புற்றுநோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சி ஈடுபட்டு வந்தார். இவருடன், பிஹெச்டி மாணவர் ஜெ.மஞ்சுநாத் இணைந்து காளானில் புற்றுநோயை அழிக்கக்கூடிய பண்புகள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு இதற்கான காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பித்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேசன் கூறுகையில், ”கடந்த 2008-ஆம் ஆண்டில், இதற்கான ஆராய்ச்சியை தொடங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவடைய 3 ஆண்டுகள் ஆனது. ஜவ்வாது மலை, கொல்லி மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் காடுகளில் இருந்து காளான்களை சேகரித்து, இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. காடுகளில் வளரக்கூடிய காளான்கள், வீட்டில் வளரக்கூடிய காளான்கள் மற்றும் மைசிலியம் ஆகியவற்றில் புற்றுநோயை அழிக்கக்கூடிய பண்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காளான்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உட்பொருள்கள் கொண்டு வெவ்வேறு செல்களில் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகபட்சமாக மார்பக புற்றுநோய் செல்களும் மற்றும் 80 சதவீதம் பெருங்குடல் புற்றுநோய் செல்களும் அழிக்கப்பட்டது” என்று தெரிவித்தார். 


;