science

img

140 மில்லியன் ஆண்டுக்கு முன் வாழ்ந்த டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு!

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி ஒன்றில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு பகுதியில் காக்னாக் என்ற நகரில் உள்ள திராட்சை தோட்டங்களில் அருகில் 70 ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வகை இனங்களின் 7,500க்கும் மேற்பட்ட படிமங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். டிராகன்கள் டைனோசர்களின் எலும்புகள் மற்றும் ஆஸ்ட்ரிச் டைனோசர்களின் எலும்பு ஆகியவற்றையும் இதற்கு முன்னர் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த இடம் ஐரோப்பாவின் முக்கிய இடமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இதே பகுதியில் மீண்டும் மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எலும்பு, டைனோசரின் தொடை பகுதி எலும்பாக இருக்கும் என்றும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக படிமமாக மண்ணில் புதைந்து கிடந்துள்ளது என்றும், சுமார் இரண்டு மீட்டர் (6.6 அடி) இருக்கும் அந்த எலும்பு தாவரங்களை உண்ணும் நீண்ட கழுத்துடைய டைனோசர் எலும்பாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து, பாரிஸில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த படிம ஆய்வாளர் ரோனன் அலைன் கூறுகையில், "இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. இந்த எலும்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த விதம் ஆச்சரியமளிக்கிறது. இம்மாதிரியான டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம். இந்த டைனோசர்களின் எடை 40 டன்னிலிருந்து 50 டன் வரை இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதேபோன்ற ஒரு தாவர வகை டைனோசரின் எலும்பு இதே இடத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நீளம் 2.2 மீட்டராகவும், எடை 500 கிலோவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

;