science

img

அறிவியல் கதிர்

அகத்தில் இருப்பது

ஜெர்மனியிலுள்ள லுட்விக் மாக்சிமிலான் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு கரைசலை பயன்படுத்தி மனித உள் உறுப்புகளை தெளிவாகக் காட்டும் உத்தியை கண்டுபிடித்துள்ளார்கள். இரத்தக் குழாய்கள் மற்றும் செல்களின் அமைப்பை சிறப்பாகப் படம் பிடிப்பதற்காக இதை செய்துள்ளார்கள். இதனால் உறுப்புகளை 3 டி பிரிண்ட்டிங் செய்வது மேம்படுமாம். ‘முதன் முதலாக மனித உறுப்பின் அசலுக்கு நெருக்கமாக வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது’என்கிறார் இந்த ஆய்வின் தலைவர் அலி எர்டர்க்

நான் பேச நினைப்ப தெல்லாம்

மனித மூளையின் செயல்பாடுகளின் அடிப்படையில் செயற்கை பேச்சை உருவாக்கும் ஒரு கருவியை முதன்முறையாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உண்டாகியிருக்கிறார்கள். மூளையில் மின் முனைகளைப் பொருத்தி அங்கு உருவாகும் மின் சமிக்கைகளை அடையாளம் காணப்படுகிறது. பின்னர் அவை உதடுகள், நாக்கு, தொண்டை, தாடை ஆகியவற்றின் அசைவுகளாக மறுகுறியீடு(decode) செய்யப்படுகின்றன. இந்த அசைவுகள் செயற்கை பேச்சாக மாற்றப்படுகின்றது. 

காற்று மாசும் வீட்டு எரிபொருளும்

காற்றில் இருக்கும் நுண் துகள் மாசை (Fine particular matter) பி.எம் 2.5(PM 2.5) என்றழைக்கிறார்கள். கங்கைச் சமவெளி மாவட்டங்களில் இந்த மாசு ஏற்பட வீடுகளில் மண்ணெண்ணெய், விறகு, கரி முதலியவற்றை எரிப்பது நாற்பது சதம் அளவுக்கு காரணமாக உள்ளது. 
நாட்டின் மற்ற இடங்களில் இந்த சதவீதம் மாறுபடலாம். ஆனால் வீடுகளிலிருந்து வெளிவரும் தூசு காற்றின் மாசுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. வீடுகளிலிருந்து வெளிவிடப்படும் மாசு முற்றிலும் நிறுத்தப்பட்டால் வெளிக் காற்றின் மாசு நிலை குறைக்கப்பட்டு தேசிய காற்று சுத்த தரத்தை அடையலாம் என்று இந்த முடிவுகள் கூறுகின்றன. மேலும் எல்லா வீடுகளிலும் சுத்தமான எரி பொருளை பயன்படுத்தினால் இந்தியாவில் அகால மரணங்கள் 13% குறையும்; உடல்நலத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
நாட்டின் சரி பாதி வீடுகளில் மாசு ஏற்படுத்தும் எரிபொருளை பயன்படுத்தும்போது வெளிக்காற்று எப்படி சுத்தமாக இருக்கும் என்று கேட்கிறார் இந்த ஆய்வின் உறுப்பினரான கிர்க் ஆர்.ஸ்மித். 
பல கிராமங்களில் எரிவாயு விநியோகிக்கப்பட்டாலும்  நீரைக் கொதிக்க வைக்கவும் வீடுகளை வெதுவெதுப்பாக வைக்கவும் விறகையே பயன்படுத்துகிறார்கள் என்கிறார் இன்னொரு ஆய்வாளர். தில்லியைப் பொறுத்தவரை வயல்களில் பயிர் தூர்கள்  எரிப்பு, ஆலை உமிழ்வு, வாகன மாசு, செங்கல் சூளைகள் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. வீட்டு உமிழ்வைக் கட்டுப்படுத்தினாலும் மாசு தரக் கட்டுப்பாட்டை அடைய முடியாது என்கிறார் டெல்லி ஐ ஐ டி யை சேர்ந்த சக்னிக் டே. ஆகவே வீட்டு உமிழ்வைக் கட்டுப்படுத்துவது எளிதானது என்றாலும் மற்ற உமிழ்வுகளையும் கட்டுப்படுத்தும் பன்முக அணுகுமுறை வேண்டுமென்கிறார் அவர்.  தில்லி ஐ ஐ டி, கலிபோர்னியா பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ் பல்கலைக் கழகம், டெல்லி நகர்ப்புற மாசு உமிழ்வுக் கழகம் ஆகியவை கூட்டாக செய்த ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் பல விதம்

மார்ச் மாதம் மிகப் பெரும் பறவை கணக்கீடு (Great Backyard Bird Count (GBBC) உலகளவில் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான ‘மக்கள் அறிவியலாளர்கள்’ உதவியுடன் இது நடந்தது. இதில் நமது சேலம் மாவட்டம் 8420 பறவைகளைக் கவனித்து ஈ பேர்ட்(eBird) எனும் இணைய தளத்திலும் செயலியிலும் பதிவேற்றம் செய்து முதல் இடத்தை பிடித்தது என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தியாவில் 1786 பறவை ஆர்வலர்கள் 10,764 மணி நேரம் செலவழித்து 852 இனங்களை சேர்ந்த  22273 பறவைகளை பதிவேற்றம் செய்து அமெரிக்காவிற்கு அடுத்து உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.வலசை போகும் கதிர் குருவி,பக்கி, காட்டு வாத்து போன்ற பறவைகள்  காணப்பட்டது சுவாரசியமானது.       

இதற்கு சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக செயல்பட்டது முக்கிய காரணம். அர்ப்பணிப்புள்ள பறவை ஆர்வலர்கள் மட்டுமல்ல மாணவர்களும் இதில் பெருமளவு ஈடுபட்டனர்.
“4000 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாமும் பறவைகாண்(bird watching) பயணமும் நடத்தப்பட்டன. அவர்கள் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.இதற்கு நல்ல பலன் இருந்தது.இப்பொழுது கிருஷ்ணாம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில் குமார் மற்ற பாடங்களோடு சேர்த்து பறவை கவனிப்பையும் நடத்துகிறார்.மாணவர்களும் பறவைகளை ஆவணப்படுத்துவது,சரிபார்ப்புக் குறிப்புகள் தயாரிப்பது, இணைய  தளத்திலும் செயலியிலும் ஏற்றுவது ஆகியவைகளை கற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வர்.

இந்தியாவில் முன் ஆண்டுகளில் பதிவிடப்படாத 15 வகை பறவைகள் இந்த ஆண்டு காணப்பட்டன.இவற்றுள்  நீண்ட மூக்கு குருவி (long-billed wren babbler),புள்ளி வாத்து(Eastern spot-billed duck), மரங்கொத்தி(Kashmir nutcracker) போன்றவை அடங்கும்.  காலப்போக்கில் இந்தக் குறிப்புகளின் உதவியுடன் பறவைகளின் பன்மை, எண்ணிக்கை ஆகிய போக்குகளை தெரிந்துகொள்ளலாம்.
இன்னும் பெரும் எண்ணிக்கையில் ஆர்வலர்கள் கலந்துகொள்வது தேவைப்படுகிறது. இதற்காக பொது வெளிகளிலும் வளாகங்களிலும் 12௦ பறவை நடை பயணங்களும் விளக்க உரைகளும் நடத்தப்பட்டன. கல்வி நிலையங்களிலும் நிறுவன வளாகங்களிலும் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. மே 4 ஆம் தேதி இந்திய வட்டார பறவைகள் தினம்(India’s Endemic Bird Day) கடைபிடிக்கப்படுகின்றது.  
 ஏப்ரல் 12, 2019 இந்து ஆங்கில

நாளிதழ் - ஆதிரா பெருஞ்சேரி) 

;