science

img

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி இந்தியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. இன்று நடைபெற்ற புலிகள் தின சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி இந்த அறிக்கையினை வெளியிட்டார். இந்த அறிக்கையில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. இந்நிலையில், இந்திய காடுகளில் புலிகளின் எண்ணிக்கை 2006-ல் 1,411 ஆகவும், 2010-ல் 1,706 ஆகவும், 2014-ல், 2,226 ஆகவும் இருந்தது. இதுவே கடந்த 2018-ல் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக 33 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகமான புலிகள் வாழும் மாநிலமாக மத்தியப்பிரதேசம் உள்ளது. இங்கு 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 264 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2006ம் ஆண்டில் தமிழகத்தில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை , 2010 ல் 163 ஆகவும் , 2014ல் 229 ஆகவும் உயர்ந்தது. தற்போது தமிழகத்தில் 264 ஆக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட புலிகள் காப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று நடைபெற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விழாவில் விருது பெற்றது. 

தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக, 2013ம் ஆண்டில் சத்தியமங்கலம் வனப்பகுதி அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் அதிக பரப்பளவுள்ள புலிகள் காப்பகம் இதுதான். வறண்ட இலையுதிர் காடுகள், முட்புதர் காடுகள் , மலைப்பகுதி, ஆற்றோர படுகை என வேறுபட்ட அடுக்குகளில் அமைந்துள்ள இந்த சத்திய மங்கலம் வனப்பகுதி புலிகள் வாழ ஏதுவான பகுதியாக இருப்பதால் இங்கு புலிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;