science

img

வானிலைக்கான வானொலிகள்

வானொலி நிலையங்களும் அவற்றின் ஒலிபரப்புகளும் பல வகைப்படும் என்பதை நாம் ஏற்கனவே கடந்த வார கட்டுரைகளில் கண்டுள்ளோம், அந்த வரிசையில் இந்த வாரம் வானிலைக்கான வானொலிகளை பற்றி காணவுள்ளோம்.அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் வருடம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் மற்றும் வானிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும், இவற்றை பற்றிய தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் வானிலைக்கான பிரத்யேகமான வானொலி நிலையங்களும் அவர்களின் ஒலிபரப்புகளும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

ணிகத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வானிலை குறித்த செய்திகள் மற்றும் மக்களுக்கு தேவைப்படும் அன்றாட தகவல்களை அமெரிக்க தேசிய வானிலை வானொலி (NWR) மூலமாக வழங்குகிறது. NWR, வானிலை வானொலி நிலையங்களின் தேசிய குழுமமாக திகழ்கிறது. இது வானிலை பற்றிய தகவலை மக்களுக்கு நேரடியாக அருகிலுள்ள தேசிய வானிலை சேவை அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பாகும். 

இந்த வானொலி தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வானிலை சேவை மூலம் வழங்கப்படும் எச்சரிக்கைகள், கணிப்புகள் மற்றும் பிற பேரிடர் நிகழ்வுகள் சம்பந்தமான விடயங்களை ஒலிபரப்பும். 

NWR வானொலியானது வானிலை மற்றும் அவசரகால தகவல்களை நாடு முழுவதும் பரிமாறிக்கொள்ள உதவும் மிகப்பெரிய தகவல் சேவையாக உள்ளது.

மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அவசரகால மேலாளர்கள் மற்றும் பிற பொதுத்துறை அதிகாரிகள் உடன் இணைந்து NWR அனைத்து வகையான இயற்கை பேரிடர் குறித்த எச்சரிக்கை மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் (பூகம்பங்கள் அல்லது பனிச்சரிவு போன்றவை), சுற்றுச்சூழல் (இரசாயன வெளியீடுகள் அல்லது எண்ணெய் கசிவுகள் போன்றவை) மற்றும் பொது பாதுகாப்பு தகவல்களை ஒலிபரப்பி வருகிறது.

NWR வானொலி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன் ஒலிபரப்பிகள் (டிரான்ஸ்மிட்டர்) மூலம் அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கடலோர பகுதிகளுக்கும் பியூரிட்டோரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் அமெரிக்க பசிபிக் பிராந்தியங்களுக்கு தன் சேவையை வழங்குகிறது. NWR வானொலி கேட்க அதற்கென வடிவமைக்கப்பட்ட விசேட வானொலி பெட்டிகள் அல்லது NWR வானொலியின் ஒலிபரப்பியின் சமிக்ஞைகளை கேட்க திறன்படைத்த வானொலி பெட்டிகள் தேவை.

இந்த வானொலியை அமெரிக்காவில் 162.400, 162.425, 162.450, 162.475, 162.500, 162.525 மற்றும் 162.550 மெகாஹேர்ட்ஸ் அலைவரிசைகளில் நாம் கேட்கலாம்.

அமெரிக்க வானிலை வானொலி போன்றே தாய்லாந்து நாட்டு அரசும் பாங்காக் வானிலை ஆய்வு மையம் மூலம் வானிலை பற்றிய தகவல்களை வெளியிட வானொலி ஒன்றினை நடத்தி வருகிறது. 

அமெரிக்க வானொலிக்கும் தாய்லாந்து வானொலிக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம், தாய்லாந்து வானொலி தன் சேவையை உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சிற்றலை மூலம் வழங்கி வருகிறது, ஆனால் அமெரிக்க வானொலியோ அந்நாட்டவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அவர்களின் VHF ஒலிபரப்பை கேட்கும் திறன்கொண்ட வானொலி பெட்டிகளுக்கு மட்டுமே ஒலிபரப்புகிறது. அமெரிக்க வானிலை வானொலியை அமெரிக்காவிற்கு வெளியில் உள்ளவர்கள் இணையத்தில் மட்டுமே கேட்க முடியும்.

உலக முழுவதும் உள்ள மக்கள் தாய்லாந்து வானொலியை 6765.1 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 8743 கிலோ ஹெர்ட்ஸ்சில் கேட்கலாம். தாய்லாந்து வானிலை வானொலியை பற்றிய மேலும் தகவலுக்கு www.tmd.go.th/en/ என்ற இணையதளத்தை காணலாம்.

நம் இந்தியாவில் வானிலைக்கென்று தனியான வானொலி இல்லை என்ற போதிலும் அகில இந்திய வானொலி அடிக்கடி வானிலை குறித்த தகவல்களை பிற நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒலிபரப்பி வருகிறது. பேரிடர் மற்றும் புயல் காலங்களில் மக்களின் இன்றிமையா தோழனாக இரவு பகல் பாராமல் தொடர்ந்து வானிலை பற்றிய தகவல்களை வழங்கிவந்து கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.