முதலாளித்துவம் அதன் துவக்கக் கட்டத்தில் எவ்வளவு குரூரமாக உழைப்பாளிகளைச் சுரண்டியது என்பதைக் கண்டோம். 15 மணி நேரம், 16 மணி நேரம்என்று ஆலைகளில் குழந்தைத் தொழிலாளிகளைக் கூட அடித்து வேலை வாங்கியது என்பதை சென்ற இதழில் கண்டோம்.அதே முதலாளித்துவம் பெண்களை எவ்வளவு குரூரமாக நடத்தியது, மிருகங்களைப் போல நடத்தியது என்பதை மார்க்சின்சக தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் தன்னுடைய‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்ற நூலிலே நெஞ்சம் பதறும் வண்ணம் விவரிக்கிறார்.அச்சமயத்தில் ஏங்கெல்ஸ் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தன் தந்தை பங்குதாரராகயிருந்த எர்மென் அண்ட் ஏங்கெல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தினமும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் தொழிலாளர் வாழும் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் அவர்கள் வேலை நிலைமை, வாழ்க்கை நிலைமை குறித்து விசாரிப்பார். அவர்கள் வேலை நிலைமை, துன்ப துயரங்கள் குறித்து வெளியிடப்பட்ட ஆவணங்களையும், பத்திரிகைக் குறிப்புகளையும் படித்தார். அன்று 4 லட்சம் மக்களைக்கொண்ட மான்செஸ்டர் நகரில் ஏராளமானபஞ்சாலைகள், நூற்பாலைகள் இருந்தன. அந்நகரிலும், இங்கிலாந்தின் இதர நகரங்களிலுமிருந்த ஆலைகளின் பெண் தொழிலாளிகள் பட்ட சிரமத்தை, வேதனையை அவர் இந்நூலில் விவரித்துள்ளார்.
பாழடைந்த, அழுக்குப் படிந்த தொழிற்கூடங்களில் ஆண்களும், பெண்களும் 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிருந்தது. சில நேரம் அவர்கள் தொடர்ச்சியாக 40 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. இதனால் அவர்கள்பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டார்கள். இயந்திரங்களில் சிக்கி பலர் கை, கால்கள் இழந்தனர்.ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளிகளுக்கு வீடுகள் கிடையாது. அவர்கள் சுகாதாரமற்ற சமுதாயக் கூடங்களில் எவ்வித காற்றோட்டமின்றி, ஆடுமாடுகளைப் போல அடைபட்டு கால் மாடு தலைமாடாகக் கிடந்து, ஆண், பெண் என்ற வேறுபாடின்றி வேலை செய்த களைப்பினால் உறங்கினர். மேல ஆக்லே தெரு என்ற இடத்திலிருந்த அகதி முகாமில் 300 பேர் தங்க வேண்டிய இடத்தில்2740 பேர் இரவில் தங்க வேண்டியிருந்தது. அதேபோல் 460 படுக்கைகள் கொண்ட மற்றொரு அகதி முகாமில் 6681 பேர் தங்கியிருந்தனர். திருமணமான இரண்டு தம்பதிகள் ஒரே அறையில் தங்க வேண்டியிருந்தது.கிளாஸ்கோ, டப்ளின் போன்ற நகரங்களிலும் இதே நிலைதான் நீடித்தது. குடும்பத்தில்ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும்வேலை செய்ய வேண்டியிருந்தால் இரவில்தான் அவர்கள் சந்திக்க முடிந்தது.கடுமையான உழைப்பினால் களைத்துப்போன அவர்கள் குடிப்பழக்கத்திற்கும் ஆளானார்கள். குடும்பம்என்பது பாச பந்தம் அற்றுப்போய் சீர்கேடாக இருந்தது.இதில் கர்ப்பிணிகள் நிலைமை படுமோசம்.அவர்களுக்கு விடுமுறை கிடையாது, சம்பளம்இல்லாத விடுமுறை நாள் என்பது ஒன்று, இரண்டு நாட்கள் தாம். அதை மீறினால் வேலை போய்விடும்.
கர்ப்பிணிகள் கட்டாயமாக வேலை செய்யவேண்டி இருந்ததால் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டால் அந்த நூற்பு இயந்திரத்திற்கு கீழேயே படுத்து பிள்ளையைப் பெற்று விடுவார்கள். கூட வேலை செய்யும் பெண்கள் சில உதவிகள் செய்வார்கள்.இந்தத் தகவல் அறிந்தவுடன் முதலாளி அங்கே வருவான். குழந்தை பெற்ற பெண்தொழிலாளியைப் பார்த்து “உன் பிள்ளையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடு. இரண்டு நாட்கள்தான் விடுமுறை. மூன்றாவது நாளில்வேலைக்கு வரவில்லை என்றால் உன் வேலை போய்விடும்’ என்று மிரட்டி அனுப்புவான்.மூன்றாவது நாள் அந்தப் பெண் பிறந்தகுழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குவருவார். மதிய உணவு இடைவேளையில் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாகச் சென்று குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவிட்டு திரும்பவேக வேகமாக வேலைக்கு வருவார். சில பெண்கள் குழந்தைக்கு குறித்த நேரத்தில்பாலூட்ட முடியாததால் செவிலித்தாய்க்குகாசு கொடுத்து தாய்ப்பால் ஊட்டச் செய்வர்.
ஆஷ்லே பிரபு என்பவர் கொடுத்த வாக்குமூலத்தை ஏங்கெல்ஸ் இந்நூலில் மேற்கோள் காட்டுகிறார்: “எம்.எச் என்ற பெண்ணுக்கு 20 வயது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த குழந்தை, இளைய குழந்தையை கவனித்துக் கொள்கிறது. தாய் காலை5 மணிக்கு வேலைக்கு போகிறார். இரவு எட்டுமணிக்கு வீட்டிற்கு வருகிறார். இரண்டாவது குழந்தையை சமீபத்தில் பெற்றதால் அவருக்கு தாய்ப்பால் வடிகிறது. அதுஅவருடைய ஆடையை நனைத்து விடுகிறது.”அவர் மேலும் கூறுகிறார்: “எச். டபிள்யூ என்ற பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள். அவர் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு வேலைக்குப் போய் சனிக்கிழமை மாலையில்வீடு திரும்புகிறார். வீட்டிற்கு வந்து அதிகாலை3 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. தாய்ப்பால் தொடர்ந்து வடிந்ததால் உடை ஈரமாகி விட்டது.
“என்னுடைய மார்பகங்கள் பயங்கரமான வலியைத் தருகின்றன. தாய்ப்பால் தொடர்ந்துவடிவதால் உடை ஈரமாகி விட்டது...” என்றுஅந்தப் பெண் கூறியுள்ளார்.குழந்தைகளை தொடர்ந்து தூங்க வைப்பதற்காக போதை மருந்துகளை கொடுக்கும் பழக்கமும் தொழிலாளிப் பெண்களிடம் இருந்துள்ளது.இதுதான் இங்கிலாந்தில் உழைப்பாளிப் பெண்கள் பட்ட வேதனை. கொடிய வறுமை, பசி, பட்டினியிலிருந்து தப்புவதற்காக கொத்தடிமை போன்று வேலை செய்து அணு அணுவாக பெண்களும், குழந்தைகளும் வெந்துமடிந்த கொடிய வரலாறு. இந்தக் கொடிய சுரண்டலிலிருந்துதான் முதலாளித்துவம் முதலில் இங்கிலாந்திலும், பின்னர் ஐரோப்பியாவிலும் வளர்ந்தது. அதன்பின் உலகம்முழுவதிலும் பரவியது என்பது வரலாறு! காரல் மார்க்ஸ் தன்னுடைய ‘மூலதனம்’நூலில் ஏங்கல்சின் இந்தப் புத்தகத்தை வெகுவாகப் பயன்படுத்தியதோடு சிறப்பித்தும்கூறியுள்ளார்.