science

img

அறிவியல் கதிர்

♦புகைபிடிப்பதை தடுக்கும் நெக்லஸ் 
புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தைக் கைவிட உதவும் கழுத்துப் பட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தக் கருவி யில் உள்ள வெப்ப உணர்விகள் மூலம் சூட்டு தடங்கள் சேமிக்கப்படு கின்றன. புகை பிடிக்கும் நேரம், எத்தனை முறை பிடிக்கிறார்கள், எவ்வளவு நேரம் பிடிக்கிறார்கள், எத்தனை முறை இழுக்கிறார்கள்,புகை இழுத்து விடும் அளவு,ஒரு முறைக்கும் அடுத்த முறைக்கும் உள்ள இடைவெளி போன்றவை இதன் மூலம் அறியப்படுகிறது.

♦ துருக்கி நிலநடுக்கத்தின் காரணம் 
அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 7.8 எனப் பதிவாகியுள்ளது. இதற்கு முன் இந்தப் பகுதியில் 1939இல் இதே அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாம். அப்போது 30000 இறப்புகள் ஏற்பட்டன.  ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கும் இரண்டு பெரும் கண்டத் தட்டுகளின் இடையில் ஒரு சிறிய தட்டில் துருக்கி அமைந்துள்ளது. வடக்கில் பரந்த ஈரோஆசியன் தட்டும் தெற்கில் அரேபிய தட்டும் ஒரே நேரத்தில் தள்ளுவதால் இரண்டு விரல்களுக்கிடையே நசுக்கப்படும் ஒரு விதை போல துருக்கி பக்கவாட்டில் தள்ளப்படுகிறது என்கிறார் அமெரிக்க புவி ஆய்வை சேர்ந்த சூசன் ஹக். மொத்த நாடும் நழுவும் பிழைப் பகுதிகளால்(strike-slip) சூழப்பட்டுள்ளன. இதனால் துருக்கி தீவிர நிலநடுக்க நிகழ்வுகள் கொண்டது. இப்போது ஏற்பட்ட  பிரதான அதிர்வு 200 கிமீ நீளத்திற்கு உண்டானது. அதனால் பல பகுதிகளிலும் பெரும்பாலும் அழுத்தம் வெளிப்பட்டும் சில இடங்களில்  அழுத்தம் அதிகரித்தும் மாற்றங்களை ஏற்படுத்தின. இந்த  7.8 ரிக்டர் என்கிற அளவு நடுக்கம் புவிஎங்கும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தும்.  இதைவிடப் பெரிய நில நடுக்கங்களை உலகம் கண்டிருக்கிறது. கடலில் சப்டக்சன்(subduction) பகுதிகளில் 9 ரிக்டர் அளவு நடுக்கம் ஏற்படும். ஆனால் நிலப்பகுதியில் நழுவு பிழைப் பகுதிகளில் 8 ரிக்டர் அளவு என்பது அசாதாரணமானது. நிலப்பகுதியில் அதுவும் அதிக ஆழம் இல்லாத மேற்பரப்பில் ஏற்படுவதால் தீவிரமான நடுக்கம் உண்டாகிறது என்கிறார் ஹக்.

♦ நிலவில் அளவு  கடந்த  மின்சாரம் 
நிலவின் மணல் துகளிலிருந்து சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் மின் கடத்தி ஒயர்கள் தயாரிக்கும் முறையை ஜெஃப் பெசோ சின் புளூ ஆரிஜின் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. புளூ ஆல்கெமிஸ்ட் (நீல ரசவாதம்) எனப் பெயரிட்டப்பட்டுள்ள இந்த முறையில் நிலவின் மணலிலிருந்து அலுமினியம், இரும்பு, சிலிக்கான் ஆகியவை மின் பகுப்பு முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. நிலவின் எந்தப் பகுதியிலும் மின்சார பற்றாக்குறை என்பதே இல்லாமல் அளவு கடந்து தயாரிக்க முடியும் என்கிறது அந்த நிறுவனம்.

♦ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 
பாலூட்டிகளின் நீண்ட ஆயுளுக்கு குடும்பமாகவும் நட்புகள் சூழவும் வாழும் முறை காரணமாக இருக்கலாம் என்றுஒரு ஆய்வு கூறுகிறது. பாலூட்டிகளின் அதிக பட்ச வாழ்நாள் காலம் மிகவும் வேறுபட்டதாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஷுரூ எனபப்டும் மூஞ்சூறு போன்றவை இரண்டு ஆண்டுகளே வாழுகின்றன. வில்தலை திமிங்கலங்கள் சுமார் 200 ஆண்டுகள் வரை வாழும். ஏறத்தாழ 1000 பாலூட்டிகளின் வாழ்நாள் காலத்தை ஆய்வு செய்ததில், குதிரைகள்,சிம்பன்சி குரங்குகள் போன்ற கூட்டமாக வாழும் விலங்குகள் தனிமையில் வாழும் முள்ளெலிகள்,வீசெல்ஸ் போன்றவற்றைவிட அதிக காலம் வாழுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் படிநிலை மாறுதலில் (evolution) வாழ்நாள் காலமும் சமூக முறைகளும் ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளன என்று தோன்றுகிறது.    பெய்ஜிங்கிலுள்ள சீன அறிவியல் கழகத்தை சேர்ந்த படிநிலை உயிரியல் அறிஞர் சுமிங் சூ, பாலூட்டிகளின் பரிணாமத்தில் வாழ்நாள் காலம் குறித்து ஆய்வு செய்யும்போது எலிகளில் ஒரு வகை நீண்ட காலம் வாழ்வதைக் கண்டார். அவை தரைக்கடியில் சிக்கலான பெரும் சமூக அமைப்பில் வாழ்கின்றன. இதற்கு மாறாக இன்னொரு வகை எலி தனிமையில் வாழ்பவை.அவை நான்கு வருடங்களே உயிர் வாழ்வதையும் கண்டார். இன்னொரு ஆய்வில் பாபூன் எனப்படும் வாலில்லாக் குரங்குகளில் வலிமையான உறுதியான சமூக பிணைப்புகளைக் கொண்ட பெண் குரங்குகள் அவ்வாறு இல்லாதவற்றை விட நீண்ட காலம் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. சூவும் அவரது சகாக்களும் 974 வகை பாலூட்டிகளின் சமூக அமைப்பு குறித்த அறிவியல் ஆய்வுகளை தொகுத்தனர். அவற்றை தனிமையில் வாழ்பவை, இணையுடன் வாழ்பவை, கூட்டமாக வாழ்பவை என மூன்று பிரிவுகளாக பிரித்தனர். அவற்றின் வாழ்நாள் காலத்துடன் இந்த முறையை ஒப்பிட்ட போது, கூட்டமாக வாழ்பவை தனிமையில் வாழ்பவற்றை விட அதிக காலம் வாழ்வது தெரிந்தது. பிறகு உடல் பருமனுக்கும் சமூக உறவுகளுக்கும் வாழ்நாளுடன் உள்ள தொடர்பை ஒப்பிட்டனர். ஏனெனில் பெரிய பாலூட்டிகள் நீண்ட காலம் வாழ்கின்றன. ஆனால் சிறியவற்றிலும் சமூகமாக வாழ்பவை நீண்ட காலம் வாழ்வது தெரியவந்துள்ளது. எடுத்துக்காட்டாக ஷுரூவும் வவ்வால்களும் சிறியவை. ஆனால் தனிமையில் வாழும் ஷுரூ சில ஆண்டுகளே வாழ்கின்றன. சமூகமாக வாழும் வவ்வால்கள் 30-40 ஆண்டுகள் வாழ்கின்றன.  கூட்டமாக வாழ்வதில் நன்மைகளும் உள்ளன;தீமைகளும் உள்ளன. கூட்டமாக வாழும்போது ஜோடிகளுக்கும் உணவுக்கும் போட்டி நிலவும். தொற்று நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கூட்டமாக சேர்ந்து எதிரிகளிடமிருந்து தப்பிக்க முடியும். பட்டினி அபாயத்தையும் குறைக்கலாம். இரை தேடும் திறனை அதிகரித்து ஒன்றாக உணவைக் கண்டுபிடித்து சேகரிக்கலாம். இந்தக் காரணிகள் சமூக பாலூட்டிகள் அதிக காலம் வாழ உதவலாம். குடும்ப உறுப்பினர்கள் பிழைத்திருப்பதற்கு உதவி அதன் மூலம் மரபணுக்கள் தலைமுறைக்கு கடத்தலாம். அதன்மூலம் நீண்ட நாள் வாழும் பரிணாம முறை இவற்றில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

;