politics

வரலாற்றைத் திருத்தும் வஞ்சக அரசியல்

என்.சிவகுரு
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக எதை வேண்டுமானாலும், செய்யும் என்பதை தற்போதைய மகாராஷ்ட்ரா நிகழ்ச்சிப் போக்குகள் நமக்கு உணர்த்தியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான அநாகரீகமான அரசியலை அரங் கேற்றும். அதை நிறைவேற்ற கீழ்த்தரமான மூன்றாம் தர நடவடிக்கைகளிலும் இறங்கும். பிரிவினை வாத கோஷங் கள், மத மோதல்கள், சாதிய வெறுப்பு, வழிபாட்டு இடங்களில் சர்ச்சைகள் என எல்லா விசயங்களையும் அரசியலாக்கும். அதில் ஒரு புதிய அணுகுமுறையை அதிகாரத்தை இழந்த புதுடில்லியில் சங்பரிவாரமும், பாஜகவும் செய்ய நினைக்கின்றன.

சொத்தையான உபி மாடல்… 
தற்போது காவிக் கூட்டம் குஜராத் மாடலை பற்றி பெரிதாக தம்பட்டம் அடிப்பதில்லை. காரணம் அதன் உண்மை நிலைகள் அப்பட்டமாக தெரிய வந்து ஊரே சிரிக்கிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் பல மாவட் டங்களின் உள்கட்டமைப்பு சரியில்லாததால் மக்கள் பெரும் அவதிப்பட்டார்கள். இந்த வாரம் மது விலக்கு அமல் படுத்தப்படும் மாநிலம் என்று சொல்லிவிட்டு கள்ளச்சாரா யம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந் துள்ளனர்.  அதனால் சங்பரிவார் தற்போது உபி மாடலை தான் பேசுபொருளாக்குகின்றன. இதிலிருந்து ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு உபியில் நகரங்களின் பெயர்களை மாற்றியது போல, புதுடில்லியில் சுமார்40க்கும் மேற்பட்ட கிராமங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையோடு இப்போது பாஜக பிரச்சாரம் செய்கிறது. ஏன்?  இந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் பெயர்கள் இசுலா மிய பெயர்களுடன் இருப்பதாகவும் அது அவர்களுக்கு (பாஜக) தேசிய அவமானமாக இருக்கிறது எனவும் சொல்லி வருகிறார்கள்.

இதன் உண்மை என்ன? 
பாஜகவினர் சொல்லும் இந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மொகலாய மன்னர்களின் படையெடுப்புக்கு முன்னரே தற்போது இருக்கும் பெயர்களை தான் கொண்டி ருந்துன என்பதை பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, புது டில்லியில் இருக்கும் பல பகுதிகள் ஷாஜகானாபாத் தவிர்த்து மொகலாய மன்னர்களின் வருகைக்கு முன்னதாகவே 13,14 ஆம் நூற்றாண்டிலேயே உருவானது. ஷாஜகானாபாத்தை 17ஆம் நூற்றாண்டில் ஷாஜகான் உருவாக்கினார். சிரி, துக்ளாபாத், ஜஹன்பனா, பெரோஸ்பாத், தின்பனா ஆகிய நகரங்களும் முன்னரே கட்டியமைக்கப்பட்டன.  வெற்றிடமாக இருந்த டில்லியில் நகரங்களை உருவாக் கியதில் அலாவுதீன் கில்ஜி, கியாசுதீன் துக்ளக், ஃபெரோஸ் ஷா துக்ளக் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு.  இப்போது வேறு எந்த அரசியல் பிரச்சனையையும் எடுக்க முடியாமல் இருக்கும் பாஜக டில்லி மாநில அமைப்பு 40 இடங்களின் பெயர்களை உடனடியாக அர்விந்த் கெஜ்ரிவால் மாற்ற உத்தரவிட வேண்டும் என பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளது. இதன் மூலம் 1998இல் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற திட்டம் தீட்டுகிறது.

விசம் கலந்த விஷமப் பிரச்சாரம் 
பாஜகவின் டில்லி மாநில தலைவர் ஆதேஷ் குப்தா “டில்லி இனிமேல் மொகலாய மன்னர்களின் ஓய்விடம் அல்ல, பாரத தேசத்தின் தலைநகர். பாரத தலைநகரில் இசு லாமிய பெயர்கள் இனிமேல் இருக்கவே கூடாது. அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் இருக்கும் பகுதி யின் பெயர்களை சொல்லவே வெட்கப்படுகிறார்கள், கூச்சப் படுகிறார்கள், ஆகவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்கிறார்.  தற்போதுள்ள பெயர்களை உடனடியாக மாற்றி பிரபல மான உயர் காவல் துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், லதா மங்கேஷ்கர், மில்கா சிங் என மாற்று பட்டியலையும் முன் வைத்து நகரங்களுக்கு புது பெயர்கள் வைக்க சொல்கிறார்.  அதோடு இசுலாமியப் பெயர்களை தாங்கிய நகரங்கள் அனைத்துமே “அடிமைத்தனத்தின் அடையாளமாம்”. இது மட்டுமா, டில்லியில் வணிகம் நடக்கும் சைதுல் ஐஜாப்,  யூசுப் சாராய், ஷேக் சாராய், நேப் சாராய், மொகம்மதுபூர், ரசூல்பூர், நசிர்பூர் உள்ளிட்ட பல இடங்களின் பெயர்களை மாற்றி வாஜ்பாய், லதா மங்கேஷ்கர், மில்கா சிங், விக்ரம் பஸ்த்ரா ஆகியோரின் பேரில் நகர்களாக மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என கோரியுள்ளது பாஜக. மிக நுணுக்கமாக பெரும் வேலைகளை செய்து இந்த பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுள்ளது. அவர்களின் இந்த மாற்று ஆலோசனை மேலோட்டமாக பார்த்தால் ஆஹா உண்மை தானே என தோன்றும். ஆனால் உண்மை வேறு. உதாரணமாக, ஜம்ரூத்பூர் எனும் தெற்கு டில்லியில் உள்ள ஒரு பகுதி. ஜம்ரூத் இப்ராகிம் லோதியின் தந்தையார் சிக்கந்தர் லோதியின் காலத்தில் இருந்த நீதிமன்றத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்.  இது போல் பல வரலாற்று உதாரணங்களை நம்மால் சொல்லி கொண்டே போக முடியும். காவிக் கூட்டம் வரலாற்று உண்மைகளை ஏற்குமா? பாபர் மசூதி விவகாரம் எப்படி முடிந்தது என்பதை நாடே பார்த்தது. அடுத்து மதுரா, கியான்வாபி, என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

பாரம்பரியத்தின் அடையாளம் 
டில்லி அடிமைத்தனத்தின் அடையாளம் என பாஜக செய்யும் வாதம் மிகவும் பிற்போக்கானது. ஒட்டுமொத்த வரலாற்றையே மறுதலிக்கிறது என்பதே பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.  வரலாற்றியலாளர் திரு நிசாமி டில்லியின் வரலாற்று தொன்மைகளை மிக நேர்த்தியாக ஆய்வு செய்தவர். டில்லியில் சேராய்கள் (தொலை தூர பயணிகள், வணிகர்கள் தங்குவதற்கான பொது இடங்கள்) அதிகம் உள்ளது என்பது உண்மையே. மொகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இப்படி ஒரு பொது ஏற்பாட்டை செய்தது ஒரு வரலாற்று சாதனை எனவும், உலகில் வேறெங்கும் காண முடியாத ஒரு புதிய முயற்சி எனவும் சொல்கிறார். வசதியானவர்களுக்கு மட்டுமல்லாமல், எளிய வர்த்தக மக்கள், வழிபோக்கர்கள் தங்குவதற்கு விடுதிகள் கட்டி தருவது வரவேற்கத்தக்கதே.  இது ஒரு புறமிருமிருக்க, டில்லி அனைத்து திசைகளிலி ருந்தும் படையெடுக்கப்பட்ட ஒரு நகர் என்பதை நாம் மறக்க இயலாது. மிக முக்கியமாக மங்கோலியர்கள் பல முறை படையெடுத்தார்கள். அதில் மொகலாய மன்னர்கள் அலாவுதீன் கில்ஜி, தன்னுடைய நிர்வாக மற்றும் ராணுவத் திறமைகளால், புராதன நகரங்களை பாதுகாத்தார் என்பதே உண்மை வரலாறு. எப்போதுமே வரலாற்றை திரித்து கூறுவதே காவிக்கூட்டத்தின் வேலை. அதன்படி புதுடில்லி மாநில பாஜக கச்சிதமாக பிரிவினை வாத அரசியலை தூண்டுகிறது.

பிரிவினை அரசியல் 
தலைநகர் டில்லியில் புழக்கத்தில் இருக்கும் நகரங்க ளின் பெயர்களை மாற்றி. நூற்றாண்டுகளாக பின்பற்றப் படும் சமூக நல்லிணக்கத்தை உடைத்து அரசியல் அதிகா ரத்தை பிடிப்பதையே இந்தியாவில் பாஜக செய்து கொண்டி ருக்கிறது. டில்லியில் ஜஹாங்கிர்புரியில் புல்டோசர் களைக் கொண்டு சென்று குடியிருப்புப் பகுதிகளை இடிக்கப் போனதற்கு இதுவும் ஒரு அடிப்படை காரணமே.  இசுலாமியர் என்றாலே வேற்று நாட்டவர், மொகலாய மன்னர்களின் வழி வந்தவர்கள், இங்கே இருந்தவற்றை அழித்தவர்கள் என்றெல்லாம் அவதூறு பேசி இந்தியா வில் ஆட்சி செய்த மொகலாய மன்னர்கள் அனைவரும் கொலைகாரப் பாவிகள் என சித்தரிப்பு செய்ய முயற்சி செய்கிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஹுமாயூன் துவங்கி ஆட்சி செய்த எல்லா மன்னர்களும் ஆர்.எஸ்.எஸ் சொல்லும் “ அகண்ட பாரதத்தில்” பிறந்தவர்களே.

ஒற்றை அடையாளம் 
பாஜகவின் தத்தவ வழிகாட்டியாக இருக்கும் கோல்வால் கர் மற்றும் சாவர்க்கரின் வெறுப்பு அரசியலை நடை முறைப்படுத்துவதற்கு அனைத்து சாகசங்களையும் செய்வது என அக்கட்சி முடிவெடுத்துள்ள நிலையில் வேற்று நாட்டவர் அடையாளங்கள் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலை.  கோல்வால்கர் கண்டுபிடித்த விசமக் கருத்தாகங்களை “பித்ரு பூமி (முன்னோர்களின் வாழ்விடம்), புண்ணிய பூமி (நல்லவைகள் மட்டுமே நடந்த இடம்)” என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் (மத சிறுபான்மையினர்) இங்கு வாழலாம், ஆனால் பெரும்பான்மையினர் சொல்லுவதை பின்பற்றியே வாழமுடியும் எனும் அராஜகத்தை அடிப்படை யாக கொண்டே இங்கு அனைத்தும் நடக்கின்றது. பொது வாழ்வில் குறிப்பாக இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர் கள் இருக்கக் கூடாது என்பதே கோல்வால்கரின் தத்துவம்.  கோல்வால்கரின் குயுக்தியை பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான தரவுகளும், ஆதாரங்களும் உள்ளன. இதோ ஒரு சம்பவம். 1954இல் நாக்பூர் நகரத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தார்.

கருத்தரங் கத்தின் மைய விவாதப் பொருள் என்ன தெரியுமா? பார்ப்ப னர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோருக்குமான கருத்து பேதமையை எப்படி குறைப்பது? இந்து மதத்திற்குள் எப்படி ஒற்றுமையை உருவாக்குவது என்பதே அடிப்படை. அந்த கூட்டத்தில் ஒரு இசுலாமியரும் கலந்து கொண்டு பார்ப்பனர் அல்லாதோர் படும் துயரங்களை, அனுபவிக்கும் துன்பங் களை, சமூக ஒடுக்குமுறையை பற்றி எடுத்துரைத்தார்.  கோல்வால்கர் ஒரு இசுலாமியர் பேசுவதை கண்டு ஆச்சரியப்பட்டு கருத்தரங்கத்தின் ஏற்பாட்டாளர்களை அழைத்து இவர் எப்படி இதில் கலந்து கொள்கிறார் என்று வினவ, அவர்களும் அந்த இசுலாமியர் பார்ப்பனர் இல்லையே, அதனால் தான் பேசுகிறார் என பதிலளிக்க, நமக்குள் (இந்து மதத்திற்குள்) இருக்கும் பிரச்சனை களை பற்றி நாம் பேசி கொள்ளலாம், மற்றவர்கள் (இசு லாமியரோ அல்லது மாற்று மதத்தினரோ) பேச என்ன உரிமை இருக்கிறது என கேட்டு அந்த இசுலாமியரை வெளியேற்றினார் என்பதிலிருந்தே நமக்கு தெரிகிறது. (ஆதாரம். ஜோதிர்மயா சர்மா எழுதிய “ கோல்வால்கர்: இந்தியாவும்- ஆர்.எஸ்.எஸ்சும்)  இன்று புதுடில்லியின் வரலாற்றை திரித்து எழுதும் பாஜகவின் முயற்சியின் பின்னால் இருப்பது இந்து ராஷ்ட்ரம் அமைப்பதற்கான அடித்தளமே. இதற்கு முன்னோட்டமே மொகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாயா என பெயர் மாற்றிய தும், அலகாபாத்தை “பிரயாக்ராஜ்” என பேரிட்டதும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அனைத்திலும் இந்துத்துவ அடையாளமே எனும் ஒற்றை நோக்கத்தோடு வரலாற்றை முற்றிலுமாக மாற்றிட முயற்சிக்கும் பாஜகவின் செயல்பாடுகளுக்குத் தடை போட இந்திய மக்களை ஒன்றிணைப்பதே நம் கடமை. காலம் அதை நம்மிடத்தில் பொறுப்பாக்கி உள்ளது.

;