politics

img

விரக்தியின் விளிம்பில் மோடி இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது!

தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், பாஜகவின் தேர்தல் உத்திகளான இந்துத்துவா மதவெறி, பாகிஸ்தானை வம்புக்கு இழுத்தல் மற்றும் தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சேறை அள்ளிவீசுதல் ஆகிய அனைத்தும் மிஸ்டர் மோடி எந்த அளவிற்கு விரக்தியின் விளம்பில் நின்றுகொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று கூறினார். 

தி இந்து நாளேட்டில் வந்துள்ள அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:


கேள்வி: ராகுல் காந்தி ஏவுகணை அல்லது போர் விமானம் குறித்துப்பேசினார் என்பதற்காக, பாஜக அணு ஆயுதங்கள் குறித்து எல்லாம் மிகவும் பேசியிருக்கிறதே, இவ்வாறு பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தரமிழந்து சென்றிருப்பது குறித்துத் தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


சரத்பவார்: பிரதமர் குழம்பிப் போயிருக்கிறார். பிரதமர் பதவி என்பது ஒரு நிறுவனம். அதில் அமர்ந்திருக்கும் நபர் கண்ணியத்தைக் காப்பாற்றிட வேண்டும். அவரதுபிரச்சாரம், இந்துத்துவா மதவெறியுடன் தொடங்கியது. 2014இல் அவர்கள் வளர்ச்சிஎன்று கூறினார்கள். எனவே நாட்டு மக்கள் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு ஏன் அளிக்கக்கூடாது என்று கருதினார்கள். எனவே, அவர்கள் அவரை ஆதரித்தார்கள். 


தரம் தாழ்ந்த பிரச்சாரம்

ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் அவரது செயல்பாடு எப்படி இருந்தது? விவசாயிகள் தற்கொலைகள், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, தொழில் துறையில் எவ்வித வளர்ச்சியுமின்மை. எனவே இப்போது அவரால், அவரை ஆதரிப்பதற்காக, மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய விதத்தில் சொல்வதற்கான விஷயம் ஒன்று கூட இல்லை. எனவேதான், இத்தகைய முறையில் தரம் தாழ்ந்து இறங்கியிருக்கிறார். நாட்டில் நேரு, காந்தி குடும்பத்தினரையும், மகாராஷ்ட்ராவில் சரத் பவார் குடும்பத்தாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கத்தொடங்கியிருக்கிறார்.


கேள்வி: நீங்கள் 14க்கும் மேற்பட்டதேர்தல்களில் பங்கெடுத்திருக்கிறீர்கள். தேர்தல் பிரச்சாரம் இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து இதற்கு முன்பு இருந்திருக்கிறதா?


சரத்பவார்: இந்த அளவிற்கு மோசமான முறையில் பிரச்சாரம் செய்கின்ற பிரதமர் ஒருவரை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் பலரின் பேச்சுக்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். அவை எப்போதும் தங்கள் பிரதமர் பதவியின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் நிலைநிறுத்தும் வண்ணமே அமைந்திருக்கும். ஆனால் இந்தக் கோமான் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்துவதில்லை. அரசியல் ஆதாயத்திற்காக எந்த அளவிற்குத் தரம்தாழ்ந்து செல்லமுடியுமோ அந்த அளவிற்குத் தரம் தாழ்ந்திட இவரால் முடிகிறது.


வேறு விஷயம் ஏதுமில்லை

கேள்வி:உங்களுக்கு எதிராகத் தனிப்பட்டமுறையில் அவர் தாக்குதல் தொடுத்ததை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அதற்கு எதிராகப் பதிலடி கொடுப்பதற்கு நீங்கள் முன்வராமல் அதனைத் தவிர்த்துவிட் டீர்கள். இவ்வாறு பாஜகவின் விமர்சனங்களுக்கு அதே ரீதியில் பதிலடி கொடுப்பது வாக்காளர்களின் கவனத்தைப் புண் படுத்திவிடும் என்பதால்தான் அவ்வாறு பதிலடி தராமல் எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


சரத்பவார்: துரதிர்ஷ்டவசமாக ஆளும் கட்சியினர் இத்தகைய உத்திகளில் இறங்கியிருக்கிறார்கள். இது கடந்தகாலங்களில் அவர்களுக்குப் பயன் அளித்தது. ஆனால் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும், மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.அரசியல் கட்சிகள், மக்கள் மத்தியில் தங்கள் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேர்தல்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். இதுதான் இதுவரை இந்தியாவில் நடந்தது. மோடி ஜி அதனை மாற்றிவிட்டார்.


கேள்வி:முதல் தடவை வாக்காளர்கள் கணிசமாக அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையில், பிரதமர் தேசியவாதம் குறித்தும், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ ஆக்கிரமிப்பு குறித்தும் பேசுவதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திடும் என நீங்கள் கருதுகிறீர்களா?


சரத்பவார்: புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களிடம் வாக்குகளை அவர் கோருகிறார். இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற கூருணர்ச்சியை அவர் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். ஏனெனில் வாக்காளர்கள் முன் சொல்வதற்கு வேறெந்த சரக்கும்

அவரிடம் இல்லை.


மதவெறியை பயன்படுத்தும் முயற்சி

கேள்வி: பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிற பிரக்யா சிங் தாகூரை பாஜக வேட்பாளராக அறிமுகப்படுத்தியிருப்பதை எதைக் குறிப்பிடுகிறது?


சரத்பவார்: மோடி, இந்துமதவெறியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்பதையும், இவ்வாறு மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை வளர்த்தெடுத்து அதனைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதையுமே இது காட்டுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு அவருக்கு உதவிடும் என்பதில் எனக்கு ஐயமாக இருக்கிறது.


கேள்வி: மகாராஷ்ட்ராவில் நடந்த முதல் பேரணி, பொதுக்கூட்டத்தில் மோடி உங்களை மட்டுமே தாக்கிப் பேசினார். மாநிலம் முழுதும் அப்போது நீங்கள் காங்கிரஸ்-தேசியக் காங்கிரசுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தீர்கள். மாநிலத்தில் எதிர்க்கட்சி மத்தியில் தலைமைக்கான நபரில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா?


சரத்பவார்: உண்மையில் அப்படி இல்லை. ஹெலிகாப்டர்கள் இல்லாத காலத்தில்கூட நான் மிகவும் விரிவான அளவில் பிரச்சாரங்கள் செய்திருக்கிறேன். நான் அதனை விரும்புகிறேன். மோடி ஆட்சியில் தொடர்வதில் உள்ள ஆபத்தை நான் உணர்ந்திருக்கிறேன். மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் புதிய தலைமையை உருவாக்க வேண்டியது என்னுடைய கடமை என்றும் நான் உணர்கிறேன். அதே சமயத்தில் நம் முன்னேயுள்ள மிகப்பெரிய ஆபத்து என்பது, மிஸ்டர் மோடியின் எதேச்சதிகார அணுகுமுறையாகும். அவரும்கூட என் குடும்பத்தைத் தாக்கிக்கொண்டிருக்கிறார். இது என்ன தேசியப் பிரச்சனையா அல்லது தேர்தல் பிரச்சனையா? விரக்தியில் பீடிக்கப்பட்டுள்ள ஒரு நபரால்தான் இந்த அளவிற்குச் செல்ல முடியும். இவ்வாறு விரக்தியின் விளிம்பிற்கு அவர் சென்றிருப்பது மிகவும் நன்றாகவே தெரிகிறது.


பார்க்கமறுக்கும் தேர்தல் ஆணையம்

கேள்வி: தேர்தல் ஆணையம் சில தலைவர்களின் தேர்தல் பிரச்சார உரைகள் தொடர்பான நிலைப்பாட்டிலும், பிரதமர் ஆயுதப்படையினர் குறித்து விமர்சனங்களைச் செய்வது குறித்தும் மற்றும் பல விதங்களில் பேசுவது குறித்தும் அமைதி காப்பதிலும் நடுநிலையுடன்தான் இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?


சரத்பவார்: அதுமட்டுமல்ல … மிஸ்டர் மோடி இன்று வாக்களித்துவிட்டுவந்தபின்பு சாலையில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார். இதற்கு எதிராகவும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டதா என்பது குறித்து நான் எவ்வித விமர்சனமும் செய்யவில்லை. எனினும் நாம் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். மிஸ்டர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பார்க்கமறுக்கிறது என்றே தோன்றுகிறது.


கேள்வி: நரேந்திர மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியிலிருந்து எதிர்க்கட்சிகள் கற்றுக்கொண்டிருப்பது என்ன?


சரத்பவார்: எதிர்க்கட்சியினர் என்ற முறையில் நாம் ஒன்றும் அதிகமான அளவிற்குக் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நிச்சயமாக ஒருவர் அரசாங்கத்தில் அமரும்போது அரசு எந்திரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கற்றிருக்கிறோம்.


2004-ஐப் போல ஒன்றிணைவோம்

கேள்வி: மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளநிலையில் நாட்டு மக்களின் மனோபாவம் எப்படி இருப்பதாக நீங்கள் கணித்திருக்கிறீர்கள்?


சரத்பவார்: தேவையான எண்ணிக்கையை பாஜகவால் பெற முடியாது என்று என்னால் கூற முடியும். அவர்கள் அரசாங்கத்தை அமைக்க முடியாது. மற்றவர்கள் 2004இல் இருந்ததைப்போன்று ஒன்றிணைய வேண்டியிருக்கும். ஸ்திரமான அரசாங்கத்தை அளிப்பதற்காக ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை வடிவமைக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்குப்பின்னர், நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன்.


கேள்வி: அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் உங்களால் இணைத்துவிட முடியுமா?

சரத்பவார்: அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு வலைப்பின்னலை என்னால் அளிக்க முடியும். அதற்காக நாம் நிச்சயம் முயற்சிப்போம்.


இளைஞர்களுக்கு வாய்ப்பு

கேள்வி: அப்படி வரும்நிலையில் நீங்கள் பிரதமருக்கான வேட்பாளராக இருக்க முடியுமா?


சரத்பவார்: எவ்விதமான நிலைக்கும் நான் வலியுறுத்த மாட்டேன். 25 ஆண்டுகளாக நான் அமைச்சராக இருந்திருக்கிறேன். அது போதும். அதுபோன்ற முன்மொழிவு எதையும் நான் ஏற்க மாட்டேன். அந்த அளவிற்கு நான் என்னை நினைத்துக் கொண்டிருக்கவில்லை. நல்ல தலைவர்கள் சிலரை அதற்காகத் தேர்ந்தெடுக்கப் பார்ப்போம்.1967இல் எனக்கு 27 வயதாக இருக்கும் போது, இதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் சில மூத்த தலைவர்கள் இதனை எதிர்த்தார்கள். கட்சிக்காக எதிர்காலத் தலைமையைத் தயார் செய்யவேண்டியது நம் கடமை என்று யஷ்வந்த்ராவ் சவான் கூறினார். இன்றைய தினம் அதே போன்றதொரு நிலைமை உருவாகியிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். புதிய தலைமையை உருவாக்க வேண்டியது எனக்கும் என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொறுப்பாகும். நாம், புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.


சிறுபிள்ளைத்தனம் 

கேள்வி: மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தத் தடவை நீங்கள் போட்டியிடாமல் நழுவி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறாரே!


சரத்பவார்: 2014இலேயே நான் போட்டியிடுவதை நிறுத்திவிட்டேன். தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதாகும். நான் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். 14 தேர்தல்களுக்கு மேல் நான் போட்டியிட்டிருக்கிறேன். இருந்தாலும் இவரது தரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையே இவரது பேச்சுக்கள் காட்டுகின்றன.


(நன்றி: தி இந்து)

தமிழில்: ச.வீரமணி

;