politics

வாக்களிக்காத காந்திநகர் மக்கள்

திருநெல்வேலி, ஏப்.18 -நெல்லையை அடுத்த பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து, குறவர் சமுதாயத்தினர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதிகாரிகள் சமரசம் பேசியும் பயனில்லை.பேட்டை 48-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர் பகுதி குடியிருப்பில் 126 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இதில்மலைகுறவர், மலைவேடன், வேடுவர், இந்துகுறவர் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதருமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.மேலும், புதன்கிழமை வாக்காளர்கள் அடையாள அட்டை வழங்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தேர்தலை புறக்கணிக்கப்பதாகவும் அறிவித்தனர். இதையடுத்து, வருவாய்த் துறையினர் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, புதிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது